மலையாளம் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஓணம் ஆகும்.  வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி மன்னனை அழித்ததும், அந்த மகாபலி மன்னன் வருடத்திற்கு ஒருநாள் அதாவது ஆவணி திருவோண தினத்தில் தனது மக்களை பார்க்க வருவதுமே ஓணம் பண்டிகை ஆகும்.


ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை, 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை என 10 நாட்கள் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை நாள் இன்று 29-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மலையாள மக்கள் அனைவரும் திருவோணப்பண்டிகையை குடும்பத்தினருடன் பூக்கோலம் போட்டி, சத்யா உணவுடன் கொண்டாடுவார்கள்.






இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மலையாள மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலையாள மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொலியை முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பல்லத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாக நடத்துவோம். மலர்கள், விருந்து மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓணம் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


ஓணம் பண்டிக்கையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று மலையாள மக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் பூக்கோலமிட்டு சிறப்பு பூஜைகள் செய்வார்கள், அதேபோல் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இன்று கொண்டாட பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், ஓணம் சத்யா தான் இதில் முக்கிய அம்சமாகும். தேங்காய் எண்ணெய், நெய், முந்திரி மற்றும் தேங்காய்ப் பால் போன்ற பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான முறையில் சத்யா உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவில் குறைந்தது 26 வகையான உணவுகளாவது இருக்கும். அதிகபட்சமாக 64 உணவுகள் வகைகள் வரை மதிய உணவு பரிமாறப்படும். உப்பு, நேந்திரம் சிப்ஸ், சக்கரவரட்டி, பீட்ரூட் பச்சடி, தோரன், அவியல், பொரியல், காரக்கறி, இஞ்சிப்புளி, புளிச்சேரி, புளிக்கறி, மோர்கறி, கதம்ப சாம்பார், ரசம், தயிர், பருப்பு, நெய், மட்ட அரிசி சாதம், பப்படம், வாழைப்பழம், பாலடை பிரதமன், ஓலன், காலன் ஆகியவை சிறப்பான முறையில் சமைத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கதினருடன் சேர்ந்து உணவு அருந்துவர்.