நடிகர் பப்லு ப்ரித்விராஜ் தன்னுடைய வாழ்க்கையின் பெர்சனல் பக்கங்களைச் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் பப்லு ப்ருத்விராஜின் மகனின் ஆட்டிசம் பிரச்னை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். `பிற பெற்றோரைப்போல என்னையும் என் மகனின் ஆட்டிசம் பிரச்னை பாதித்தது. தமிழ் சினிமாவில் நடித்து பணம் சம்பாதிப்பது எதற்காக, யாருக்காக எனத் தோன்றியது. இதனால் கடுமையான மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கேற்ற சரியான வல்லுநரைச் சந்தித்து அதில் இருந்து மீள வேண்டும். அடுத்ததாக என் மகனுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். அதன்பிறகு, அவனின் பிரச்னையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினேன். மகனை வெளியே அழைத்துச் சென்றால், `உங்க பையன் லூசா?’ எனக் கேட்பார்கள். அது மிகுந்த வேதனையையும் கோபத்தையும் தந்தது. அப்போது என் மனைவி, `இதுதான் நம் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. இதற்காக ஏன் கோபப்பட வேண்டும்? நமக்கே ஆட்டிசம் குறித்து நம் மகன் பிறந்த பிறகு தான் தெரிய வந்தது.
பிறரை இதனால் கோபித்துப் பயன் எதுவும் இல்லை’ என்று கூறினார்’ என்றவர், அதனைத் தொடர்ந்து, `சில ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கு சென்றாலும் என் மகனைப் பற்றி பேசத் தொடங்கினேன். அதனால் மகனை எங்கு சென்றாலும் அழைத்துச் செல்லத் தொடங்கினேன்.. காரின் மேற்பகுதியில் ரூஃப்டாப் இல்லாமல் மகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது, அவன் அதனை மிகவும் விரும்பி மகிழ்வான். அதில் இருந்து என் மகனை அனைவரும் விசாரிக்கத் தொடங்கினர். உலகில் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் தமிழர்கள் என்னிடம் `உங்க பையன் எப்படி இருக்கான்?’ எனக் கேட்பார்கள். என் மகனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடிகர் பப்லு ப்ரித்விராஜ், `தற்போது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பொது இடங்களில் மரியாதை கிடைக்கிறது. திருநங்கைகள் மீதான அருவெறுப்பும் நம் சமூகத்தில் நிலவி வந்தது. என் நண்பன் ரகுவரனுக்குப் பெண் வேடம் போடுவது பிடிக்கும். என்னைப் பெண் போல நடிக்க முயன்று பார் எனத் தொடர்ந்து சவால் விடுவார். நான் முயன்று முயன்று, கடுமையான முயற்சிக்குப் பிறகு என்னால் பெண்னைப் போல நளினங்களுடன் நடிக்க முடிந்தது.
என் நண்பன் சமுத்திரகனியுடன் இரண்டு ஆண்டுகள் மோதல் இருந்தது. திடீரென ஒரு நாள், அவனின் ஃபோன் கால் வந்தது.. `அரசி’ என்ற சீரியல் இயக்குகிறேன்.. திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா?’ என அவர் கேட்டு முடிப்பதற்குள் ஒப்புக் கொண்டேன். 10 நாள்கள் இடைவெளியில் பல்வேறு திருநங்கைகளுடன் பழகி அவர்களைப் போல நடிக்கக் கற்றுக் கொண்டேன். மும்பையில் படப்பிடிப்பு நடந்தது..
ராதிகா உள்பட பலரும் அசந்துவிட்டார்கள். இந்த கதாபாத்திரத்திற்காக அதிகம் சிரமங்களைச் சந்தித்தேன்.. கழிவறை செல்ல முடியாது. ஆண்களின் பார்வை மோசமாக இருக்கும். அதனை எதிர்கொண்டதால், அதன்பிறகு திருநங்கைகளை எங்கு பார்த்தாலும் உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்’ என்று `அரசி’ தொடரில் தனது கதாபாத்திரம் குறித்தும் பேசியுள்ளார்.
`அரசி’ தொடரில் தான் நடித்த கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசிய அவர், `இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னைத் தன்பாலீர்ப்பாளர் என முடிவு செய்து கொண்டார்கள். நான் தன்பாலீர்ப்பாளராக இருந்தால் வெளிப்படையாக அறிவித்திருப்பேன். ஆனால் நான் அப்படியில்லை. தன்பாலீர்ப்பாளர்களாக இருப்பதும் இயற்கையே.. அவர்களை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.