சேலம் மாவட்டம் லைன்மேடு பகுதியில் உள்ள வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற பெண், தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தாய்-மகள் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மந்திரவாதி வேடத்தில் வந்த திருடன், உங்கள் வீட்டில் பிரச்சினை பில்லி சூனியம் உள்ளது. இதனை கழித்துவிட சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கூறி, தாய் மகளிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அந்த மந்திரவாதியை பூஜை செய்ய வீட்டிற்குள் அனுமதித்து உள்ளனர். பூஜை செய்து கொண்டு இருந்த போது மகள் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை கழற்றி மந்திரவாதி வைத்திருந்த சொம்பில் போடும்படி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணும் தான் அணிந்திருந்த நகையை கழற்றி சொம்பினுள் போட்டுள்ளனர். சொம்பினை துணியில் சுற்றி பின்னர் சிறிது நேரத்தில் மந்திரவாதி தாய் மற்றும் மகளிடம் பேச்சுக் கொடுத்து அவர்கள் கவனத்தை திசை திருப்பி தன் பையில் இருந்த மற்றொரு சொம்பை வைத்துவிட்டு நகைகள் இருந்தன சொம்பினை தனது பையில் வைத்துக் கொண்டு, மாற்றிய சொம்பை தாயிடம் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் கழித்து பொம்பிளை திறந்து நகைகளை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு உடனடியாக அழைக்குமாறும் கூறி உருது மொழியில் தனது பெயரை எழுதி தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து சந்தேகத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் அவர் எழுதிக்கொடுத்த என்ணை தொடர்பு கொண்டபோது அது அரூரை சேர்ந்த வேறு நபருக்கு சென்றுள்ளது. உடனடியாக மந்திரவாதி கொடுத்த சொம்பை திறந்து பார்த்த போது அதில் கற்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக சாலைக்கு சென்று பார்த்தபோது மந்திரவாதி போல் இருந்த திருடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, பல வீடுகளில் பிரச்சனை உள்ளதாக கூறி உள்ளே நுழைய முயற்சித்ததாகவும், ஆனால் புதிய நபர் என்பதால் யாரும் அவரை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. நகைகளை திருடிக் கொண்டு ஓடியபோது சாலையில் இருந்த கல் தடுக்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த டீக்கடையில் டீ மாஸ்டர் தண்ணீர் கொடுத்தபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டு மீண்டும் ஓடியுள்ளார். பின்னர் தாய், மகள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர் இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மந்திரவாதி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.