கரூர் அருகே கல்குவாரி பொலிரோ வேன் மோதி ஜெகநாதன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு-கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி ஓட்டுநர் சக்திவேல், உதவியாளர் ஆகியோர் மீது க. பரமத்தி காவல் நிலையப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிலை அருகே உள்ள செல்வகுமாருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல் பட்டு வருகிறது. கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் அமைந்துள்ளது.
செல்வகுமார் என்பவர் நிலம் பிரச்சினை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜெகநாதன் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்கு சொந்தமான கல்குவாரி சட்ட விரோதமாக இயங்கியதால் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் க. பரமத்தி அருகே கருடயம்பாளையம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்கு சொந்தமான பொலிரோ வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வ குமாருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இந்த நிலையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமான ஜெகநாதனை லாரி ஏற்றி கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி ஓட்டுநர் சக்திவேல், மற்றும் உதவியாளர் ஆகியோர் மீது க. பரமத்தி காவல் நிலையப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஜெகநாதன் என்பவர் மீது மோதிய வாகனம் கொலையா?அல்லது விபத்தா என்பதை குறித்து க.பரமத்தி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் சக்திவேல் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ராணிப்பேட்டை சேர்ந்த கூலிப்படையான ரஞ்சித் என்பவரும் கொலைக்கு சம்பந்தப்பட்டுள்ளார் என விசாரணை தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிரஷர் கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார் பொலிரோ வாகனம் டிரைவர் சக்திவேல்,ராணிப்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படை ரஞ்சித் மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.