திருடர்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒதுவிதம் . பூட்டை உடைப்பது, ஜன்னலை திறப்பது, பீரோவை தகர்ப்பது என டிஸைன், டிஸைனாக திருடர்கள் பல ரகம் இருந்தாலும், அவர்கள் அகப்படுவது ஒரே ரகத்தில் தான். சிசிடிவி கேமராக்கள் தான் தற்போது திருடர்களுக்கு சிம்மசொப்பனம். அதனாலோ என்னவோ... திருடர்களுக்கு சமீபமாக சிசிடிவி அலர்ஜி அதிகரித்து விட்டது. திருடு போன பொருட்களை மட்டுமின்றி, திருடியவரையும் காட்டிக் கொடுக்கும் சிசிடிவி கேமராக்களை ஒழித்துக் கட்ட திருடர்கள் முடிவு செய்துவிட்டார்கள் போலும். ஆமாம் அப்படி ஒரு சம்பவம் தான் செஞ்சியில் நடந்திருக்கிறது. 



 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜேந்திரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர்  மணிகண்டன். வீட்டின் பின்புறத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.  கடந்த சனிக்கிழமை இரவு வியாபாரம் முடித்துவிட்டு, அன்றைய நாள் வியாபாரமான பணத்தையும் கடையில் உள்ள கல்லாவில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஞாயிறு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட வியாபாரத்தை திங்களில் ஈடுகட்டிவிடலாம் என்கிற ஆசையில், ஆவலாய் கடையை திறக்க இன்று வந்துள்ளார்.  கடையை திறந்தால், கல்லா காலி. ‛என்னடா இது... இங்கே இருந்த கல்லாவை காணோம்...’ என, பதறியடித்து சுற்றி சுற்றி பார்த்ததில் பொருட்கள் அனைத்துமே சிதறி கிடந்திருக்கிறது. கடைக்குள் நுழைந்து யாரோ வேலையை காட்டிவிட்டார்கள் என்பதை உறுதி செய்த மணிகண்டன், ‛இருங்கடா... என் வேலையை காட்டுறேன்...’ என, கடைக்குள் வைத்திருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை பார்க்க சிஸ்டத்தை ஆன் செய்துள்ளார்.

 



  அங்கு அதைவிட பெரிய அதிர்ச்சி. சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர்., சிஸ்டமும் அபேஸ் ஆகியிருந்தது.  கல்லாவில் இருந்த 4 லட்சம் ரூபாயை சிசிடிவி மூலம் மீட்டு விடலாம் என்கிற ஆசையில் சென்றவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் செலவழித்து வைத்த சிசிடிவியும் பறிபோனது இடியாய் இறங்கியது.  உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து நடந்ததை கூற, அங்கு வந்த போலீசாரும், கேமராவை பார்த்து விட்டு, ‛சிசிடிவி கேமராவை ஆன் பண்ணுங்க... செக் பண்ணுவோம்...’’ எனக் கூற, ‛சார்... அதையும் தான் தூக்கிட்டு போயிட்டானுங்க...’ என மணிகண்டன் கூற, போலீசாருக்கு தூக்கி போட்டது.



 

‛இது நம்ம லிஸ்டுலயே இல்லையே...’ என, நொந்து கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து, களவு போன கல்லா பணத்தையும், திருடு போன சிசிடிவி கருவியையும் திருடியவர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்களாம். சிசிடிவியை மீட்க சிசிடிவி உதவுமா? பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.