கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் அருகே செல்போன் செயலி மூலம்  தன்பாலின ஈர்ப்பாளர்களை வரவழைத்து மிரட்டி பணம் பறித்த வாலிபரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். 


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் GRINDR - Gay Apps என்ற செல்போன் செயலி மூலம் தன்பாலின ஈர்ப்பில் நாட்டம் உள்ள நபர்களை வரவழைத்து பணம் பறித்த சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகார்களின் பேரில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தெக்கலூர்  பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (25) என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஏற்கனவே திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் இது போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர் என்று தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் GRINDR - GAY CHAT APPS யை பயன்படுத்தி பலரிடம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் போல் நடித்து, அவர்களுடன் சேட் செய்து பின்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் வரவழைத்து அடித்து மிரட்டி பணம், நகை மற்றும் மொபைல் போன்களை மிரட்டி பறித்துக் கொள்ளும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கிஷோர் குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதேபோல தன்பாலின ஈர்ப்பாளர்கள் பயன்படுத்தும் செயலியை பல நபர்கள் பயன்படுத்தி தன்பாலின ஈர்ப்பாளர்கள் போல் நடித்து, நகை மற்றும் பணங்களை பறித்து வருவதாகவும், இது குறித்து வெளியே சொல்ல தயங்குவதினால் பல்வேறு வழக்குகள் பதியப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்த காவல் துறையினர், பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தால் இது போன்ற குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண