சிஜிஎம் பிக்சர்ஸ் - நாச்சியார் புரொடக்சன்ஸ் தயாரித்து ஆதிரை தமீம் அன்சாரி இயக்கும் படம் செஞ்சமர். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னை, சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் ஆர்.வி உதயகுமார், “இந்த உலகத்தில் இலவசமாக கிடைப்பது கை தட்டல் தான். ஏன் தட்டுகிறோம். எதற்காக தட்டுகிறோம் என்று தெரியாமலே நாட்டை ஒரு வழி பண்ணி விட்டோம். நம் பெயருக்கு கைத்தட்ட வேண்டாம். நாம் ஏதாவது சாதித்தால் முதுகைத்தட்டி கொடுத்தால் போதும். உண்மையான கை தட்டல் என் அருமை தம்பி சீமானுக்கு தான் கொடுக்க வேண்டும்.


நடந்து முடிந்த தேர்தலில் நான் நன்கொடை, பரிசு எதுவும் கொடுக்க மாட்டேன். தமிழினத்தை காக்க, மானத்தை காக்க ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லையெனில் விடுங்கள் என்று நின்றார் எனில் அவர் தமிழன். பணத்தால் வெல்வதை விட குணத்தால் வெல்வது தான் சாலச் சிறந்தது.


நாம் எங்கு போய் கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை. இந்திய நாடு பொருளாதாரத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறது என்று ஒருபுறம் சொல்கிறார்கள். உலக அளவில் 5 வது இடம், 4 வது இடத்தை பிடிக்க போவதாக சொல்கிறார்கள். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று நமக்கே தெரியவில்லை. 


இப்போது மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் குடும்பமே கம்யூனிஸ்ட் குடும்பம். என் வாழ்க்கை துவங்கியதே பாலன் இல்லத்தில் தான். தனது சிந்தனையால், எழுச்சியால் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுபவன் தான் தமிழன், ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் கொடுத்தார்கள். மூன்று ஓட்டு. ஆனால் ஒரு ஓட்டுக்கு காசு தரவில்லை.நம் வருத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நடுத்தெருவில் நின்று தனி ஆளாக போராடும் சீமானுக்கு நிகர் யாருமில்லை. 


அந்த உணர்வுக்கு ஒருத்தர் எழுந்து கை தட்டினால் போதும். எந்த தலைவனாக இருந்தாலும் சரி, நீங்கள் அவர்களை பின்பற்றினால் கை தட்டுகள். மாறி மாறி கட்சிகள் ஆண்டாலும் மாற்றங்கள் வந்தாலும் அடிப்படை கஷ்டங்கள் மாறவில்லை. இன்னும் சாதி சண்டையை இழுத்து விட்டு அதில் குளிர் காண்கிறார்கள். நான் எடுத்த சின்னக் கவுண்டர் படத்தை பற்றி கேட்டு யூடியூபில் கலாய்த்தார்கள். அது  சீமானுக்கு தெரியும்.


திருமாவளவனே சொல்லி இருக்கிறார்.  கவுண்டர் என்பதும் தேவர் என்பதும் சாதியின் பெயர் கிடையாது என்று. அவர் பேச்சைக்கேட்க சொல்லுங்கள். நாவிதன், வண்ணான் என்பதும் சாதியல்ல. ஆண் சாதி, பெண் சாதி தவிர வேறு எதுவும் கிடையாது என்பதை இளைய சமுதாயத்துக்கு சொல்கிறேன். செஞ்சமர் தான் சென்சிடிவ் விஷயமே. நல்ல தலைவர்களை பார்ப்பதே கஷ்டம் தான். ஒருவன் கஷ்டத்தை பார்த்து சந்தோஷப்படுகிறான் என்றால் அவன் சினிமாக்காரனாக தான் இருக்க முடியும். சீமான் சினிமாவில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்” என்று கூறினார்.


தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கிழக்கு வாசல், பொன்னுமணி, சின்னக் கவுண்டர் படங்கள் எல்லாம் திரையில் ஒரு இலக்கியம் போல எடுக்கப்பட்ட படங்கள். காட்சிகளை கவிதை போல் நடத்திக் கொண்டுசெல்பவர் இயக்குனர் ஆர்.வி உதயகுமார்‌ .  அவரது அருகில் உட்காருவது பெருமையாக இருக்கிறது.


ஆர்.வி உதயகுமார் பேசும்போது, சாதிய சமூகம் எவ்வளவு மக்களை பின்னுக்கு தள்ளியது. ஒரு தலைமுறைக்கு அது இருக்க கூடாது என்று பெரிய தலைவர்கள் போராடியும் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. கிராமத்தில் ஒரு நாடகம், தெருக்கூத்து நடந்தால் சாதி இருக்கிறது.  இதில் சம்பந்தமில்லாத ஒருவன் சினிமாவை கண்டுபிடித்தார். கோயிலுக்குள் நுழைய கூட சாதி இருக்கிறது. ஆனால் திரையரங்கில் நுழைய , படம் பார்க்க எந்த சாதியும் தேவையில்லை. அப்படி பார்த்தால் சாதியை ஒழிக்க கோயிலை விட அதிகமாக திரையரங்கு கட்ட வேண்டும். நவீன அறிவியல் சாதியை ஒழித்து விட்டது. 


கட்ட வண்டியில் இருந்த சாதி, மக்கள் காரில் வரும் போது செத்து விட்டது. பல்லக்கில் பயணம் செய்பவர் புண்ணியவான். சுமப்பவன் பாவி என்று முன்பு சொல்லப்பட்டது. பிறகு புரட்சியாளர்கள் வந்த பிறகு பல்லக்கில் பயணம் செய்பவன் ஆதிக்கவாதி. சுமப்பவன் ஏமாளி என்று சொன்னான். 


ஆண் சாதி பெண் சாதி என்று இரண்டு இருப்பதாக அண்ணன் உதயகுமார் கூறினார். இல்லை ஆண் பெண் என்பது பாலியல் வேறுபாடு. ஔவை பாடும் போது சாதி ஒழிய வேறில்லை என்று பாடினார். இட்டோர் பெரியார். இடாதோர் இழிகுலத்தார். அதாவது,, தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து உதவுபவர் உயர்ந்த சாதி. தனக்கு என்று சுயநலமாக இருப்பவன் இழி சாதி.  இந்த படத்துக்கு வருவதற்கு எனக்கு ரொம்ப தயக்கம். இது பாகுபலி மாதிரி கற்பனையில் எடுக்கும் படமல்ல. இதிகாசம் பொய் பேசும். இலக்கியம், புராணம் பொய் பேசும். ஆனால் வரலாறு பொய் பேசக்கூடாது. பேசாது. உண்மை தான் பேச வேண்டும். ரத்தம் சிந்தி போராடிய வரலாறு. பல உயிர்களை பலியாக்கியது. 


தவறாக ஒரு உணர்வை கடத்தி விட்டால் , உண்மைக்கு மாறான செய்தியை சொல்லிட்டால், அதனால் பெரிய பின்விளைவுகள் வரும். படத்தை பார்க்காமல் பாராட்டி விட்டால் எனக்கு பிரச்சினை வந்து விடுகிறது. 


பிரெஞ்ச் படங்களில் அவனுடைய கலை, கலாச்சாரம் பண்பாட்டு காட்டுகிறான். ஆனால் நமது படங்களில் அப்படி இல்லை. நமக்கு உணவு, உடை,, மொழி, வாழ்க்கை என எதுவுமே இல்லை. தலைப்பே இல்லை. எனக்கு கொடுத்த அழைப்பிதழில் தமிழில் தான் இருந்தது. 


இந்த தமிழுக்காக தான் நாங்கள் அறுபதாயிரம் பேர் போராடி செத்தோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் ஒருவர் உட்கார்ந்து உருவாக்கியது அல்ல. இந்தி, வல்லூசி வைத்து ஒருவர் உருவாக்கியது. எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. ஆனால் என்னுடைய மொழி தான் இறைவனால் பேசப்பட்டது. மூதாதையர்,முருகன், சிவன் பேசிய மொழி. இறையனார் தான் எங்கள் சிவன். நீங்கள் பேசும் இங்கிலீஷ் நான் போட்ட பிச்சை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் என் தாய் மொழியில் இருந்து கடன் வாங்கப்பட்ட சொற்கள். 


வெள்ளைக்காரன் நன்றாக தமிழ் படித்து விட்டு பாடம் எடுக்கிறான். ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர் தமிழை கற்று தேம்பாவணி என்ற நூலை எழுதி விட்டு போனார். 


 மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்ய காசு இல்லை. ஆனால் தேர்தல் வந்தால் எங்கிருந்து காசு வருகிறது என்று தெரியவில்லை.  நம்ம மக்களை நினைக்கும் போது ரொம்ப பாவமாக இருக்கிறது. வருந்தாமல் இருக்க முடியாது. ஆனால் விட்டுட்டு போகவும் முடியாது. இப்போது ரொம்ப அதிநவீனத்துக்கு வந்து விட்டார்கள். 


எங்கள் ஊர் எம்.எல்.ஏ தொகுதிக்கு வருவாரா, நல்லது செய்வாரா என்று மக்கள் நினைத்தது போக , எங்க ஊர் எம்.எல்.ஏ சாவாரா? எப்போது சாவார் என்று நினைக்கும் அளவுக்கு மோசமாக போய் விட்டது.  இளைய தலைமுறை விழித்து கொள்ள வேண்டும். அரசியல் புரிதலும், தெளிவும் வர வேண்டும். அருகில் இருக்கும் கேரளாவை பார்த்தாவது கற்று கொள்ள வேண்டும்.  கூகுளில் முன்பு தமிழன் என்று தட்டினால் கூலி என்று வரும். இப்போது புலி என்று வரும். உண்மையிலே பாரின் ரிட்டன் நான் தான். என்னை படாதபாடு படுத்துவார்கள். இது ஒரு படம் அல்ல. படைப்பு. இதை எடுக்க துணிந்த இயக்குநருக்கு பாராட்டுக்கள். என்றும் இது ஒருவரின் வேலை, கடமை இல்லை. ஒவ்வொருவரின் கடமை” என்று கூறினார்.