நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூம். இவருடைய மகன் அப்துல் காதர் (27). இவர் தற்போது பாளையங்கோட்டை சங்கர் நகர் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அப்துல் காதர் பாளையங்கோட்டை கேண்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அப்துல் காதரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டது.




இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர்கள் பாலசந்தர், விஜயகுமார், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்துல் காதர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


 


போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த ஒருவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அப்துல்காதர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்துல் காதரின் உறவினர்கள் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 


இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க, நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மேல சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜி என்ற விஜயகுமார் (25), ராஜீவ்நகர் 2 ஆவது தெருவை சேர்ந்த துரை மகன் சரவணன் (24), மில்லர்புரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பிரவீன்குமார் என்ற சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தை சேர்ந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த மார்ட்டின் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அப்துல்காதர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 


இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய சாத்தான்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (22), செல்லப்பா (25), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாதேஷ்வரன் (23), தூத்துக்குடியை சேர்ந்த காளியப்பன் (26) ஆகிய 4 பேர் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை நீதிபதி தமிழரசன் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் சாத்தான்குளத்தை சேர்ந்த மாணிக்கராஜா (25) தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அப்துல் காதரின் அண்ணன் சாகுல் என்பவர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.