மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு, ஊசி போட்ட பிறகு திடீரென உடல்நடுக்கமும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உடனடியாக மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்ட பிறகு பெரும்பாலானோர் உடல்நிலை சீரடைந்தது. மேல் சிகிச்சைக்காக இரண்டு பேர் மட்டும் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து சீர்காழி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

சீர்காழி அரசு தலைமை மருத்துவமனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சீர்காழி தாலுக்காவை சேர்ந்த ஏராளமான மக்கள் நாள்தோறும் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள தாய்சேய் நல மையத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காகவும், மகப்பேறு சிகிச்சைக்காகவும் வந்து செல்கின்றனர். 

Continues below advertisement

36 பேருக்கு பாதிப்பு 

வழக்கம் போல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 36 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அண்மையில் குழந்தை பெற்ற சில பெண்களுக்கு, மருத்துவர்கள் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர். ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே, பலருக்கு திடீரென உடல்நடுக்கம் தொடங்கி, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு இந்த நிலை ஏற்பட்டதால், அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவின் பொறுப்பு மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் பதற்றம்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தலைமை மருத்துவர் அருண்ராஜ் குமாரிடம் தொடர்பு கொண்ட போது, அவர், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு ஊசி செலுத்தப்பட்ட பிறகு, திடீரென உடல்நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது உண்மைதான். உடனடியாக, அந்த மருந்தின் மாதிரிகள் மற்றும் ஊசி செலுத்தப்பட்ட முறைகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளோம். அத்துடன், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மாற்று மருந்துகளை அவர்களுக்குச் செலுத்தினோம்," அதனை தொடர்ந்து அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் இது குறித்து ஆய்வு செய்த பின்னர் முழு விபரம் தெரியவரும் என தெரிவித்தார்.

2 பேருக்கு தீவிர சிகிச்சை 

சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலானோரின் உடல்நிலை சீரடையத் தொடங்கியது. ஆயினும், இரண்டு பேர் உடல்நிலை தொடர்ந்து சீரடையாததால், மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரும் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த சீர்காழி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம், எந்த நிறுவனத்தின் மருந்து பயன்படுத்தப்பட்டது, அந்த மருந்தின் காலாவதி தேதி, ஊசி செலுத்தப்பட்ட விதம், மற்றும் இது போன்ற நிகழ்வுகள் முன்பு எப்போதாவது நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஊசி செலுத்தப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவ நிபுணர்களின் கருத்து

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட மருந்து அல்லது தடுப்பூசிக்கு ஒவ்வாமை (Allergic Reaction) ஏற்படும் போது இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும். எனினும், ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு ஒரே மாதிரியான ஒவ்வாமை ஏற்படுவது அரிதானது. பயன்படுத்தப்பட்ட மருந்தில் ஏதேனும் குறைபாடு இருந்திருக்கலாம் அல்லது சேமிப்பு மற்றும் விநியோகத்தில் ஏதேனும் பிழை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இது குறித்து, அரசுத் தரப்பில் இருந்து சுகாதாரத் துறையினர், உடனடியாக அந்த மருந்து மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு அறிக்கையின் முடிவுகளுக்குப் பிறகே, இந்தப் பிரச்னைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

சுகாதாரத் துறையின் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர், மருத்துவத்துறை உயர் அதிகாரிகள், மற்றும் மருந்து கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்வு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற அஜாக்கிரதை இனிமேலும் நிகழாமல் இருக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.