கலசபாக்கம் அருகே வரப்பு தகராறில் பெரியப்பா மகனை அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த உள்ள துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காந்தி வயது (55) இவர் விவசாயி. இவருடைய தம்பி சுப்பிரமணி வயது (50) இவர்கள் இருவருக்கும் தேவனாம்பட்டு அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை இருவரும் பாகப்பிரிவினை செய்துக்கொண்டு தனித்தனியே வீடு கட்டி நிலத்திலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிக்கும், காந்திக்கும் நிலத்தின் நடுவில் செல்லக்கூடிய வரப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது.
காந்திக்கு 2 மகள்களும், தங்கதுரை வயது (28) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் தங்கதுரை ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதில் தங்கதுரைக்கும், அனிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது. பின்னர் 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக ஓசூரில் இருந்து தங்கதுரை தேவனாம்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளார்.சுப்பிரமணிக்கு வினோத், விஜி ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் நிலத்தின் இடையே உள்ள வரப்பில் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த தேக்கு மரம் வெட்டுவதில் காந்தி குடும்பத்தினருக்கும், சுப்பிரமணி குடும்பத்திற்கும் கடந்த 10-ந் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு, இந்த வாக்கு வாதம் இரு குடும்பத்தினரும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வினோத், விஜி ஆகிய இருவரும் சேர்ந்து காலையில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தங்கதுரையை இரும்பு கம்பியால் அடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த தங்கதுரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன், போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், கலசபாக்கம் ஆய்வாளர் (பொறுப்பு) கவிதா மற்றும் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அண்ணன்-தம்பியை இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். வரப்பு தகராறில் பெரியப்பா மகனை அண்ணன்-தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.