கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சொரத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 44). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தங்கி, கூலி வேலை செய்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி (37) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு அவர்கள் சொரத்தங்குழியில் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு சிவசங்கர், அரிகிருஷ்ணன்ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனசேகருக்கு தனது மனைவி கிருஷ்ணகுமாரியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி கிருஷ்ணகுமாரி திடீரென மாயமானார். இதுகுறித்து, தனசேகர் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணகுமாரியை தேடி வந்தனர்.




இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரி திடீரென தனது இளைய மகன் அரிகிருஷ்ணனுக்கு போன் செய்து, தான் மேல்மருவத்தூர் கோயிலில் தொண்டு செய்து வருவதாகவும், இங்கேயே தங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது அரிகிருஷ்ணன் கிருஷ்ணகுமாரிடம் உங்களை காணவில்லை என்று அப்பா முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்து உள்ளார். எனவே ஊருக்கு வரும்படி கூறி உள்ளார். அதற்கு கிருஷ்ணகுமாரி, நான் ஊருக்கு வரவில்லை, முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று தெரிவித்தார். அதன்படி மாலை 5.30 மணிக்கு கிருஷ்ணகுமாரி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்திற்கு வந்தார்.


பின்னர் அவர், காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை சந்தித்து, நான் எனது கணவர் தனசேகருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை, தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தொண்டு புரிய விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.  இதற்கிடையே தனது மனைவி காவல் நிலையம் வந்துள்ளது பற்றி அறிந்த தனசேகர், தன்னுடைய மகன்கள்  சிவசங்கர், அரிகிருஷ்ணன் மற்றும் தனசேகரின் அண்ணன்கள் தனவேல் (52 ), ஜெயராமன் (48), ஜெயராமனின் மகன் அசோக்ராமன், உறவினர் செந்தில்நாதன் ஆகியோருடன் காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தார்.  இந்த நிலையில் போலீசாரிடம், தனது விருப்பதை தெரிவித்த பின்னர் கிருஷ்ணகுமாரி காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.  அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தனசேகர் உள்ளிட்டவர்கள் கிருஷ்ணகுமாரியை திடீரென, வழிமறித்து  தாங்கள் எடுத்து வந்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றினர். 




பின்னர் தனசேகர் உள்ளிட்டோர் உயிரோடு தீ வைத்து எரித்துக் கொல்வதற்காக கிருஷ்ணகுமாரி மீது தீயை பற்றவைக்க முயன்றனர். உடன் அவர் கூச்சலிட்டார். சத்தம்கேட்ட  காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ஓடிவந்து கிருஷ்ணகுமாரியை மீட்டு பாதுகாப்பாக போலீஸ் நிலையத்திற்கு உள்ளே அழைத்து சென்றனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகுமாரியை வெளியே விடக்கோரி  வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதோடு, அவரை வெளியே அனுப்பாவிட்டால் நாங்கள் தீக்குளிப்போம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.  இருப்பினும் போலீசார் கிருஷ்ணகுமாரியை வெளியே விடவில்லை.




இதையடுத்து ஜெயராமனின் மகன் அசோக்குமார் போலீசாரை மிரட்டியபடி தனசேகர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு தனசேகரையும் அங்கிருந்து மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து முத்தாண்டிக்குப்பம் ஆய்வாளர் நந்தகுமார்  தலைமையிலான போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 7 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில், செந்தில்நாதன் தப்பி ஓடிவிட்டார்.  தனசேகர்,  சிவசங்கர், அரிகிருஷ்ணன், தனவேல், ஜெயராமன், அசோக்ராமன் ஆகியோரை கைது செய்தனர்.  இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் போலீஸ் நிலைய பகுதியில் பாதுகாப்புக்காக அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.