எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் என்றொரு பழமொழி உண்டு. ஆனால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையே பற்றி எரிகிறது.

உலகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. அப்படியிருக்க இந்தியா அதிக வரிகளை இதன் நிமித்தமாக செலவழிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அரசாங்கமும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

ஏன் இந்த விலையேற்றம்?

சர்வதேச அளவில் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியில் நிலவும் பிரச்சினையும், பயோடீசல் பயன்பாட்டின் அதிகரிப்புமே வெஜிடபிள் ஆயில் எனப்படும் சமையல் எண்ணெய் விலையேற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் சோயாபீன் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், சோய் ஆயில் எனப்படும் சோயா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. 2020க்குப் பின்னர் பாமாயில் விலையும் 18% அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் சூரியகாந்தி விதை உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவு சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரச் செய்துள்ளது.



இந்தியாவுக்கு ஏன் கவலை?

கச்சா எண்ணெய், தங்கம் அடுத்தபடியாக சமையல் எண்ணெய்யே இந்தியாவில் இறக்குமதிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. அதுவும், சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா சராசரியாக ஆண்டுக்கு $8.5 முதல் $10 பில்லியன் டாலர் அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இப்போது விலையேற்றத்தால், இறக்குமதி செலவினங்கள் மிகமிக அதிகமாகியிருக்கிறது.  கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி அளவானது 4 மில்லியன் டன்னில் இருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது 2030ம் ஆண்டில் 20 மில்லியனாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியானது தேவையை சமாளிக்கும் அளவுக்கு இல்லை. இந்திய விவசாயிகளும், அரிசி, கோதுமை போன்ற தானியங்களைப் பயிரிடுவதில் காட்டும் ஆர்வத்தை எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் காட்டுவதில்லை.

2019-20 காலகட்டத்தில் இந்தியா 10.65 மில்லியன் டன் சமையல் எண்ணெய்யை உற்பத்தி செய்தது. இது இந்தியாவின் தேவையான 24 மில்லியன் டன்னில் பாதிகூட எட்டவில்லை. இதனால், பற்றாக்குறையை சமாளிக்க இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து 7.2 மில்லியன் டன் பாமாயிலும், பிரேசில் மற்றும் அர்ஜடினாவில் இருந்து 3.4 மில்லியன் டன் சோய் எண்ணெய்யும், ரஷ்யா, உக்ரைனில் இருந்து 2.5 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யையும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.



 

என்ன சொல்கிறது அரசாங்கம்?

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஏற்கெனவே மக்கள் வேலையிழப்பு, பொருளாதாரப் பின்னடைவு ஆகியனவற்றை சந்தித்துவருகின்றனர். ஏற்கெனவே வாகன எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியனவும் விலையுயர்ந்து வருகின்றன. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையேற்றமும் மக்களை கூடுதலாக வாட்டத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் எண்ணெய் வித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் தெளிவான தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களை அரசு இன்னும் வகுக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இந்தியாவில், நிலக்கடலை, சோயாபீன்ஸ், கடுகு ஆகிய எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அரசாங்கம் அவற்றின் கொள்முதல் விலையை நிர்ணயிக்கவில்லை. இத்தகைய எண்ணெய் வித்துக்கள் மீது அரசாங்கத்தின் விலை நிர்ணயத்தில் நிலையின்மை இல்லாததால், விவசாயிகள் அரிசி, கோதுமை தானியங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.



சமையல் எண்ணெய் மீதான வரிகளின் வாயிலாக ரூ.35,000 கோடி ஈட்டும் அரசாங்கம், அதில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாகக் கொடுத்து உள்நாட்டு விவசாயிகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உதவ வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் இதைப்பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக, இறக்குமதி வரியில் சில சமரசங்கள் செய்துகொள்ளுதலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.