கோவையில் செல்போனில் அடிக்கடி பேசிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலைசெய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை காந்தி மாநகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் கவிதா. 32 வயதான இவர் அப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து, பூபதி என்ற மகனுடன் வாழ்ந்து வந்தார். அப்போது இலங்கை அகதியான குமார் என்கின்ற லவேந்திரன் (49) என்ற இலங்கை அகதியை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். குமார் பழைய கட்டிடங்களை உடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு யோசுவா என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கவிதா அடிக்கடி அதிக நேரம் வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை குமார் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே செல்போன் அடிக்கடி பேசக்கூடாது என குமார் சத்தம் போட்டதால் கோபித்துக்கொண்டு, கவிதா நண்பர் வீட்டிற்கு சென்றதாகவும், மீண்டும் கவிதா வந்தால் ‘முடித்துக் கட்டிவிடுவேன். அப்ப தான் எனக்கு நிம்மதி’ என மற்றவர்களிடம் குமார் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த கவிதாவிற்கும், குமாருக்கும் இடையே நேற்றிரவு செல்போனில் அடிக்கடி பேசுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் விளையாட வைத்திருந்த கிரிக்கெட் பேட்டினால் கவிதாவை குமார் ஆத்திரத்தில் அடித்துள்ளார். கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் அருகே வசிக்கும் அவரது சித்தி மகன் செளந்தரராஜன் கவிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த கவிதாவின் மகன் பூபதி ’அம்மாவை அப்பா அடித்துக் கொண்டிருக்கிறார்’ என கூறியுள்ளான்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற செளந்திரராஜன் கிரிக்கெட் பேட்டினால் தாக்கிக் கொண்டிருந்த குமாரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் வீட்டினுள் பார்த்த போது பேட்டினால் தாக்கியதில் கவிதா தலை உடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் ஏற்கனவே அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. அப்போது உடனடியாக அங்கிருந்து குமார் தப்பியோடியுள்ளார். இந்த கொலை குறித்து செளந்தரராஜன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவிதாவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.