தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். அவரின் ஒரு சின்ன அசைவும் கூட அன்றைய ட்ரெண்டிங்காகவும், விவாதமாகவும் மாறிவிடும். விஜய்யை சுற்றி எப்போதும் ஒரு அரசியல் எதிர்பார்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை பயன்படுத்தி ரசிகர்களை கொம்புசீவி விடுவதில்லை விஜய். அதே நேரத்தில் தன் மீதுள்ள அரசியல் பேச்சுகளுக்கு அவ்வப்போது உரத்தை அள்ளி வீசிவிடுவார். ரசிகர்களுடனான திடீர் சந்திப்பு, விழா மேடைகளில் அதிரடி பேச்சு, சில தக் லைஃப் சம்பவங்கள் என அடிக்கடி அரசியல் நகர்வுகளையும் செய்துவிடுகிறார். ரீலோ, ரியலோ அரசியல் சார்ந்த பேச்சுகளும், செயல்களையும் அவ்வப்போது விஜயிடம் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கிறது. தொடக்கக் காலங்களில் விழா மேடைகளில் அமைதிக்கு பெயர்போன விஜய் கிட்டத்தட்ட தெறி படத்துக்கு பிறகு தெறிக்கவிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.




’’என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை தொடணும். அடுத்தவங்க இலக்கை உங்களோட உயரமா வச்சிக்காதீங்க. உங்க வெற்றியை மத்தவங்களுக்கு இலக்கா கொடுங்க. கர்வங்கள விட்டு வாழக்கத்துக்கோங்க’’ இது தெறி பட விழா மேடையில் விஜய் தெறிக்கவிட்ட வார்த்தைகள். ரசிகர்களுக்கு அட்வைஸ்களை அள்ளி வீசிய முதல் மேடை அது. அடுத்து வெளியான புலி பட மேடையில் அடுத்த கியரை போட்டு வேகமெடுத்தார் விஜய், 


’’உண்மையா ஒருத்தர வெறுப்பேன். ஆனா பொய்யா ஒருத்தரை நேசிக்கமாட்டேன். பின்னாடி பேசுறவங்கபத்தி கவல வேண்டாம். அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாத வாழ்க்கை. இருக்கறவரை எல்லாரையும் சந்தோஷப்படுத்தணும். எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சுத்தான் பழக்கம்’’ என அடுத்தடுத்த பால்களில் சிக்ஸர் அடித்தார். ’’நெகட்டிவிட்டில இருந்து விலகி போய்டணும்.. எதிரிகளே இல்லனா வாழ்க்கை போர்னு’’ மெர்சல்  மேடையில் மெர்சல் காட்டிய விஜயை மறக்க முடியாது.




தத்துவம், அறிவுரை, குட்டிக்கதை என பயணித்துவந்த படத்தின் விழா மேடைகள் அரசியல் பக்கம் நகர்ந்தது சர்க்காரில் தான். படம் வெளியாவதற்கு முன்பே பல அரசியல் விமர்சனங்களையும், பிரச்னைகளையும் தாங்கி நின்ற சர்க்கார் மேடை விஜயின் அரசியல் பேச்சால் கொழுந்துவிட்டு எரிந்தது.


’’தேர்தல்ல எல்லாம் போட்டியிட்டு, பிரசாரம் பண்ணி ஜெயித்து.. பின்பு சர்க்கார் அமைப்பாங்க.. ஆனா, நாங்க முதல்ல சர்கார் அமைச்சுட்டு தேர்தல்ல நிக்கப்போறோம்’’ என்று கொளுத்திப்போட்டார். கைதட்டலில் அதிர்ந்தது விழா மேடை. விஜயின் அந்த மேடைப்பேட்டு  முக்கிய செய்தியாகவே பார்க்கப்பட்டது. டிவி விவாதங்கள் வரை சென்றது. ’’முதலமைச்சராகிட்டா முதலமைச்சரா நடிக்க மாட்டேன். மன்னன் எவ்வழியோ.. மக்கள் அவ்வழி’’ என அரசியல் பஞ்ச் பேசி தமிழ்நாட்டையே அதிரவைத்தார். அதே அதிரடி பிகில் பட மேடையிலும் தொடர்ந்தது. அப்போது பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து மேடையில் பேசினார் விஜய். ’’வாழ்க்கையும் ஃபுட் பால் மாதிரி தான் நம்மை தடுக்க பலர் வருவாங்க. யார எங்க உக்கார வைக்கனுமோ, அங்க உக்கார வைச்சா எல்லாம் சரியாகிடும்’’ என நிகழ்கால அரசியல் பேசினார்.




அடுத்து மாஸ்டர் உருவான நேரத்தில் தான் விஜய் வீட்டில் ஐடி ரெய்ட்.  வருமான வரித்துறை குறித்து வாய்திறக்காத விஜய் வேன் மீது ஏறி ஒரு செல்ஃபி எடுத்து சம்பவம் செய்தார். மாஸ்டர் பட விழா மேடையில் ’’ஐடி ரெய்ட் நடந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என சம்பவத்தை கிளறினார் விஜய். 


படங்களில் அரசியல் வசனங்கள் என்பது கதைக்கேற்ற நகர்வுகளாக கடந்துசெல்லப்பட்டாலும், ரியலில் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளால் விஜய் தொடர்ந்து கவனிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறார். வேன் மீது செல்பி எடுத்த சமயம், ’’ரசிகர்கள்தான் என் சொத்து என ஐடிக்கு விஜய் சொல்லாமல் சொல்லிவிட்டார்’’ என செல்ஃபிக்கு கேப்ஷன் போட்டனர் ரசிகர்கள்.சமீபத்தில் வாக்களிக்க சைக்கிளை எடுத்துக்கொண்டு பாய்ந்தார் விஜய். பெட்ரோல், டீசல் விலை பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு அந்த நேரம் சைக்கிளில் பாய்ந்ததால் விஜய் வைரலானார்.ஆனால் பக்கத்து தெரு என்பதால் தான் சைக்கிளில் சென்றார் என விளக்கமளித்தது விஜய் தரப்பு. அவர் என்ன நினைத்து அதைச் செய்தார் என்பதல்ல, ஆனால் அவரின் செயல்கள் நிகழ்கால அரசியலோடு ஒப்பிடப்பட்டு வைரலாவதே கவனிக்க வைக்கிறது.




‘படத்துக்குப் படம் விளம்பரத்துக்காகவே மேடைப்பேச்சை பயன்படுத்துக்கிறார், வேறு சங்கதி இல்லை’ என ஒரு தரப்பு கூறினாலும்,  அரசியல் விளக்கை அணைய விடாமல் அடிக்கடி திரியை தூண்டுகொண்டிருக்கும் விஜய் மீது அரசியல் கட்சிகளும், ரசிகர்களும் ஒரு கண் வைத்துக்கொண்டேதான் உள்ளனர்.


Actor Vijay Birthday: ‛இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ : டாப் 10 தளபதி வாய்ஸ் ஹிட்ஸ்!