கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் லாரன்ஸ் வயது (45) இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் இயங்கி வரும்  அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இந்த நடுநிலை பள்ளியில் 102-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த பணிமாறுதல் கவுன்சிலிங்குக்கு சென்றிருந்தனர். இதனால், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தார். இதனிடையே பள்ளியில் அவர் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதனால் அச்சமடைந்த அந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் பள்ளியில் தன்னிடம் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் நடந்துகொண்டதை அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.




இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர், நடுநிலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தலைமையாசிரியர் லாரன்சை அடித்து, உதைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய தலைமை ஆசிரியர் லாரன்ஸ், தனது காரில் ஏறி தேன்கனிக்கோட்டை நோக்கி செல்ல முயன்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல், அவரது கார் கண்ணாடியை உடைத்து, கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


தாக்குதலுக்கு ஆளான தலைமை ஆசிரியர், அவர்களிடமிருந்து தப்பித்து, தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர்.




இதுகுறித்து பாதிப்புக்குள்ளான மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்த தலைமை ஆசிரியர் லாரன்சை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் லாரன்ஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, லாரன்சை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


மேலும் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் இதற்கு முன்பு பணிபுரிந்த பள்ளியில் பள்ளிக்கு தற்காலிகமாக பஞ்சாயத்து மூலம் நியமிக்கப்பட்ட பெண் ஆசிரியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாதாக கூறப்படுகிறது. ஒரு பள்ளியில் பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.