புகார் அளிக்க வந்த பெண்ணை, மசாஜ் செய்ய வைத்த போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் தன்னுடைய மகனை விடுவிக்க கோரி வந்த தாயை கை அமுக்கிவிட சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதைத் தொடர்ந்து அந்த காவலர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் சாஹராசா மாவட்டத்திலுள்ள தர்ஹார் காவல்நிலையத்தில் கடந்த மாதம் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் எடுப்பதற்காக அவருடைய தாய் அந்த காவல்நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணை காவல் நிலையத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் சசி பூஷன் சின்ஹா மசாஜ் செய்து விடுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. அத்துடன் அந்தப் பெண்ணிடம் 10ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த காவலர் காவல்நிலையத்தில் அரை நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் உள்ளன. அத்துடன் அவருக்கு அந்தப் பெண் மசாஜ் செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லிபி சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சசி பூஷன் சின்ஹாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர்,”இந்தச் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தவறு செய்த அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்