குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் கைதுப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடும் மதுரை மாவட்ட காவல்துறையினர்.

 

தமிழகத்தில் கடந்த சில மாத காலமாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக புகார் வாசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் குற்றவாளிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, ஒத்தக்கடை, உசிலம்பட்டி உள்ளிட்ட மாவட்ட பகுதியில் குற்றச் சம்பவங்களை தொடர்ந்து கட்டுப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

இந்தநிலையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் மாவட்ட காவல்துறையினர் கை துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


 

துப்பாக்கியுடன் மதுரை போலீஸ்

 

மதுரை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் துப்பாக்கி வைத்தபடி காவல்துறையினர் இருசக்கர வாகன ரோந்து பணிகளை மேற்கொள்ள தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, மாவட்ட எஸ்.பி. அர்விந்த் உத்தரவிட்டுள்ளனர்.

 



 

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

 

அதன்படி அலங்காநல்லூர் மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகம் போன்ற முக்கிய காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், துப்பாக்கியுடன் இரு சக்கர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள், சட்ட விரோத செயல்கள் பற்றியும், சமூக விரோதிகளின் நடமாட்டம் பற்றியும் கண்காணித்து வருகின்றனர். இதில் சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்களை மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் நியமிக்கப்பட கூடிய காவலர்கள் தங்களுடன் எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பர், சமூக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பொதுமக்களுக்கு அச்ச உணர்வு நீங்க வேண்டும்

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறுகையில்..,” மதுரை மாவட்ட போலீஸ் சமூக விரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அமைதியாக இருக்கும் இடங்களில் கூட சமூக விரோதிகள் உள் நுழைந்து பல்வேறு பிரச்னைகளை செய்கின்றனர். இதனால் அமைதியாக வாழ்கின்ற குடும்பங்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் மதுரை மாவட்ட பகுதியில் சுற்றிவருவது போல், மாநகர் பகுதியிலும் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்போது தான் பொதும்மக்களுக்கு அச்ச உணர்வு நீங்கும்” என்றனர்.