விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 55 பவுன் தங்க நகைகளை கத்தி முனையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில் அதற்கு சேர்த்து வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேணு (63). இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று கடையை மூடிவிட்டு, அவரது மனைவி முத்துலட்சுமி (60), மகள் விஜயகுமாரி (29) ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் 5 பேர்கொண்ட முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த வேணு மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது கொள்ளையர்கள் ஐந்து பேரும் வியாபாரி மற்றும் மனைவி, மகள் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். மேலும் மூன்று பேரையும் கை, கால் மற்றும் வாயை கட்டிவிட்டு பீரோவில் இருந்த 49 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செல்லும்போது முத்துலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தாலி மற்றும் கம்மல் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர்.
பின்னர் அவர்கள், நாங்கள் வீட்டின் வெளியே ஒரு மணி நேரம் இருப்போம், யாராவது சத்தம் போட்டால் மூன்று பேரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர். இதனால் பயந்து போன வேணு, முத்துலட்சுமி, விஜயகுமாரி ஆகியோர் ஒரு மணிநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது மர்ம நபர்கள் யாரும் இல்லை. பின்னர் வேணு குடும்பத்தினர் கூச்சலிட்டதால் பொதுமக்கள் திரண்டு, மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட 55 பவுன் நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
மளிகை வியாபாரி வேணுவின் மகள் விஜயகுமாரிக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த உள்ளனர். இதற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை பீரோவில் வைத்திருந்தனர். அந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க ......
Yashika Anand | நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்..!
காஞ்சிபுரம்: பழிக்குப்பழி சம்பவம்.. கூட்டத்தில் புகுந்து சரமாரி வெட்டு.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!