செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு நடிகை யாஷிகா ஆனந்த், ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது,அமீர், ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, யாஷிகா ஆனந்தின்,  நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து நேற்று இரவு  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி சென்றுள்ளனர்.



காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடிகையின் பெண் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்து உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



சம்பவம் குறித்து யாஷிகாவிடம், மகாபலிபுரம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில்,யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது , திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவனி சீட்பெல்ட் அணியாததால், காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், மேலும் விபத்து நடந்த பிறகு ரத்தவெள்ளத்தில் இருந்த நண்பர்களை காப்பாற்ற கூச்சல் விட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாஷிகா ஆனந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 279,337,304 A,  அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும் வண்ணம் காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மீது உயிர்சேதம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காரணத்தினால், யாஷிகா ஆனந்த் வழக்கு முடியும் வரை வாகனத்தை இயக்கக்கூடாது, என்ற காரணத்திற்காக மகாபலிபுரம் காவல்துறையினர் யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து யாஷிகா ஆனந்த் அசல் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் காரணத்தினால், சிகிச்சை முடிந்த பின்னரே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.