விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருட்டு வழக்கில் விடுதலையாகி வெளியே வந்த இரண்டாவது நாளில் நணபன் பேசவில்லை என்பதால் சக நண்பனையே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கொத்தனூர் கிராமத்தை சார்ந்த கலியபெருமாள் என்பவரது மகனான ராமச்சந்திரன் ( வயது 18) 11 ஆம் வகுப்பு படிப்பினை பாதியிலையே நிறுத்திவிட்டு கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். ராமச்சந்திரனின் தாயார் ஈரோடு பகுதியில் கரும்பு வெட்டும் பணியினை மேற்கொண்டு வருகிற நிலையில் ராமச்சந்திரன் கொத்தனூரிலுள்ள பாட்டி பவுனம்பாள் வீட்டிலிருந்து தங்கி கரும்பு வெட்டும் பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் ராமச்சந்திரனின் நண்பர்களான மோகன்ராஜ் (20) மற்றும் கந்தசாமி ஆகியோர் ராமச்சந்திரனை சந்தித்த போது என்ன பேசாமல் செல்கிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு ராமச்சந்திரன் கஞ்சா, திருட்டு போன்ற வழக்குகளில் நீங்கள் சிறைக்கு சென்று வந்துள்ளதால் உங்களிடம் பேசமாட்டேன் பழக மாட்டேன் என கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் இரவு தனது நண்பர் கந்தசாமியுடன் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று வீட்டியில் இருந்த வயதான மூதாட்டியிடம் ராமச்சந்திரன் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு வயதான மூதாட்டியும் வெளியில் மரத்தடியிலுள்ள ஊஞ்சலில் தூங்கி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து மோகன் ராமச்சந்திரனிடம் சென்று சண்டையிட்டு அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். பேரனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த மூதாட்டி சென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து திருவெண்னைய் நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்த இளைஞரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து  கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருட்டு வழக்கிலிருந்து விடுதலையான இரண்டே நாளில் நண்பன் பேசவில்லை என்பதால் சக நண்பனே நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.