திருமணம் ஆன அடுத்த நாளே நகைகளுடன் ஓடிய மனைவி மீது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டித் தோட்டத்தில் வசித்து வருகிறார் 34 வயதான ராஜேந்திரன். இவர் தனது தந்தை மற்றும் தாயுடன் தங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், பல ஆண்டுகளாக ராஜேந்திரனுக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை பெண் எதுவும் கிடைக்காத நிலையில், ஈரோடு மாவட்டம் சிறுவலூரைச்சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்கச்சொல்லி இருக்கிறார் ராஜேந்திரன். இதனையடுத்து சந்திரன், திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் பகுதியைச்சேரந்த அம்பிகா எனும் பெண் தரகரை அறிமுகம் செய்துவைக்கிறார். இவராது நல்ல வரன் பார்த்து தருவார் என்று ராஜேந்திரன் நம்பியிருந்த நிலையில் தான், பெண் தரகர் அம்பிகா, அரியலூரைச்சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மற்றொரு பெண் தரகரை ராஜேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.





பின்னர் பெண் தரகர் வள்ளியம்மா, தன்னுடைய வீட்டுக்கு ரீசா என்ற பெண் வந்துள்ளதாகவும், வந்து பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தார் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி வரச்சொல்லி இருக்கிறார். பெண்ணைப்பார்த்ததும் பிடித்துவிட்டதால் உடனடியாக பெற்றோர்களிடம் கூறி, கடந்த மாதம் 2 ஆம் தேதி ரீசாவை நிச்சயம் செய்திருக்கிறார் ராஜேந்திரன். இந்நிலையில் தான் உடனடியாக திருமணம் செய்து கொள் என பெண் வீட்டார்கள் வலியுறுத்தியதன் பேரில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். பல நாட்களாக திருமணம் தடைப்பட்டுவந்த நிலையில், தற்போது திருமணம் முடியப்போகிறது என்ற சந்தோஷத்தில் ராஜேந்திரன் இருந்த நிலையில், திருமண தரகு கமிஷனாக ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் பச்சாம்பாளையம் ஸ்ரீ செல்லப்பாண்டியம்மன் கோயிலில் வைத்து ரீசாவை ராஜேந்திரன் செய்துள்ளார்.


தன்னுடைய வாழ்க்கை தனக்கு பிடித்த பெண்ணுடன் தொடங்கப்போகிறோம் என்ற நேரத்தில் தான், அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியது. ரீசா என்ற மணப்பெண் திருமணம்  ஆன அடுத்த நாள் முழு நகை அலங்காரத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் பல மணி நேரம் ஆகியும் வராத நிலையில் விசாரித்தப்போது தான், முழு அலங்காரத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்த ரீசா காரை வரவழைத்து வீட்டிலிருந்து ராஜேந்திரன் போட்டிருந்த நகைகளுடன் மாயமானது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.





பின்னர், தனக்கு பெண் பார்த்த தரகர்களிடம் தொடர்புக் கொண்டு விசாரிக்க போன் செய்த நிலையில், அவர்களது அழைப்பை ஏற்கவில்லை. இதனையடுத்து சந்திரன் அரியலூருக்குச் சென்று விசாரித்தப்போது, ரீசாவுக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரா்ஜேந்திரன் குடும்பத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விவசாயி ராஜேந்திரன் மற்றும் நகைகளை ஏமாற்றி திருமணம் செய்ததாக 27 வயதான ரீசா, 38 வயதான பெண்தரகர் அம்பிகா மற்றும் வள்ளியம்மாள், ரீசாவின் உறவினர் தங்கம் மற்றும் தேவி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.  இப்படி தைரியமாக ஏமாற்றி திருமணம் செய்வதற்காகவே ஒரு கும்பல் உள்ள நிலையில், இதுவரை வேறு யாரையும் ஏமாற்றி உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.