அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003) மிக அதிக வட்டி வசூலிப்பதை தடை செய்வதற்காக 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தப்படும் கறாரான கீழ் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது போன்ற நிலையை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் வட்டிக்கு விடும் நபர்களுக்கு ஆதரவாக  காவல்துறையினரே செயல்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 




 

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கந்துவட்டி கொடுமை அதிகரித்து வரக்கூடிய நிலையில் காவல்துறையினர் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தடுக்க கோரியும், கந்துவட்டி தடுப்பு தனிப்பிரிவு தொடங்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கந்துவட்டி கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



 


 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் சேகுவேரா பாண்டியன் பேசியபோது, மாவட்ட முழுவதும் கந்துவட்டி புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து கந்துவட்டி கார்ர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மேலூர் பகுதியில் அதிகளவிற்கு காவல்துறையினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுகிறது. கந்துவட்டிக்கு ஆட்களுக்கு ஆதரவாக செயல்படும் இன்ஸ்பெக்டர் மீது காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலூர் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தினர் கந்து வட்டிக்கு கொடுக்கின்றனர். அப்பாவி மக்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அவர்கள் அதிக வட்டிக்கு கொடுத்து பணம் பெறுகின்றனர். பணத்தை விரைவாக கொடுக்காத நபர்களை மனதளவி துன்புறுத்துகின்றனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு அளித்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என்றனர்.