மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு வந்தார்.
அப்போது நாகராஜன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இதையாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதன் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
25 ஆண்டுகள் சிறை தண்டனை
அதன் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து நாகரானுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கோட்டரப்பட்டி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சேவியர் மனைவி ஜெனிதா (41). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த அகஸ்டின் மகன் நெல்சன் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் நெல்சன் கடந்த 11ஆம் தேதி இரவு ஜெனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஜெனிதா பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
முதியவரை ஏமாற்றியவர் கைது
பட்டுக்கோட்டை அருகே நம்பிவயல் பகுதியைச் சேர்ந்தவர் வைரவ சுந்தரம் (60) இவர் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கே நின்று இருந்த மர்ம நபர் ஒருவர் நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என சொல்லியுள்ளார். இதை நம்பி அவரிடம் வைரவசுந்தரம் ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.
அந்த நபர் இரண்டு முறை முயற்சி செய்துவிட்டு பணம் வரவில்லை என ஏடிஎம்மை திரும்ப தந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஏடிஎம் கார்டை வாங்கி பார்த்த வைரவ சுந்தரம் அவர் தந்தது தனது ஏடிஎம் கார்டு அல்ல என தெரிய வந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஒவ்வொரு ஏடிஎம்-ஆக சென்று தேடியுள்ளார். அப்போது பட்டுக்கோட்டை பெரிய தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஏடிஎம் அருகில் நின்று கொண்டிருந்த அந்த நபரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வளைத்து பிடித்தார். பின்னர் பட்டுக்கோட்டை காவல் துறைக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் அந்த மர்மநபரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் (38) என்பது தெரிய வந்தது இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.