தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ஏறத்தாழ 700 கிலோ போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டார். அதேபோல், புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அரசாணையின் அடிப்படையில் விதிகளை மீறியதாக சில நிறுவனங்கள் மீது குற்ற நவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்தும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. தடையை மீறியதாக சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை தனி நீதிபதி ரத்து செய்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகள் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக குறிப்பிடவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்திலும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவது குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இரு சட்டங்களும் புகையிலைப் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்க வழி செய்யவில்லை என்றும், அதேபோல் உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையர் தனது அதிகாரத்தை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்வது தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்து தமிழக அரசு கடந்த மே மாதம்  உத்தரவு பிறப்பித்தது. அதில் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு தடைவிதித்த போதைப் பொருட்கள் திருவையாறு அருகே கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் காரில் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நடுக்காவேரி காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, உதவி ஆய்வாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, திமுக கொடி கட்டப்பட்டு வந்த சொகுசு காரை காவல் துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர். இதில், இருக்கைகளுக்கு கீழே 93 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 700 கிலோ எடையுடைய ஹான்ஸ், பான் மசாலா, புகையிலை போன்ற போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் காரில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜீனாப்பூரை சேர்ந்த பதாராம் மகன் வஸ்னா ராம் (28), விலாகங்கா சிராவை சேர்ந்த பிரகலாத் ராம் மகன் ஜம்பா ராம் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும், இருவரும் போதைப் பொருள்களைக் கடத்திச் செல்லும்போது, காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு, அந்தந்த மாநிலத்திலுள்ள ஆளுங்கட்சியின் கொடியை காரில் கட்டிச் செல்வதும், இதேபோல இங்கு காரில் திமுக கொடியைக் கட்டி வந்திருப்பதும் தெரிய வந்தததையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.