மது குடிக்க பணம் கிடைக்கும் என்பதற்காக 13 வயது மகளை திருமணம் செய்து கொடுத்த தந்தையை காவல்துறை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதான வரதராஜ். இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். வரதராஜுக்கும் 13 வயது சிறுமியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமியின் தந்தையும், வரதராஜின் தங்கை முத்துலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளனர். 


இதுதொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வரதராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை போலீசார் மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.


விசாரணையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிறுமியின் தந்தை மது குடிப்பதற்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார். தொடர்ந்து மதுகுடிப்பதற்கு பணம் கிடைக்கும் என்பதற்காக அவர் தனது மகளை வரதராஜூக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தலைமறைவான சிறுமியின் தந்தை மற்றும் முத்துலட்சுமி ஆகியோரை மகளிர் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


குழந்தை திருமணம் :


குழந்தை திருமண தடைச் சட்டம் 2006இன்படி, திருமணம் நடைபெற ஒரு பெண் 18 வயது பூர்த்தி செய்தவராகவும், ஆண் 21 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டும். இந்திய அரசின் ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி (NFHS 5), தமிழ்நாட்டில் 12.8% குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன.