தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஞானம் நகரில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து ஒரே நாளில் ரூ. 2.57 லட்சம் மதிப்பு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வீட்டு முன்பக்க கதவை உடைத்து திருட்டு


தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் ஞானம் நகர் 10வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி என்பவரின் மகன் உலகநாதன் (48). தனியார் பணி. இவர் கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். பின்னர் கடந்த 30ம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ப்ரெஸ்லெட், தோடு, மோதிரம் என மொத்தம் 41 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்து ரூ.45 ஆயிரமும் திருடப்பட்டது தெரிய வந்தது. 


ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டிலும் திருட்டு


இதேபோல் இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் ஜானகிராமன். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவர் கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இவரும் 30ம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 கிராம் மோதிரம் ஒன்று, 400 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.45 ஆயிரம் பணம் என மொத்தம் ரூ.95 ஆயிரம் மதிப்பு பொருட்கள், பணம் திருட்டு போனது தெரிய வந்தது. 


ரூ.1.17 லட்சம் மதிப்பு நகை, பணம் திருட்டு


மேலும் ஞானம் நகர் 12வது தெருவில் வசிப்பவர் சம்பத். இவரது மனைவி ராணி (46). இவர்கள் தங்களின் உறவினர் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு தஞ்சை இ.பி. காலனியில் வந்து தங்கியிருந்தனர். இவர்களும் கடந்த 30ம் தேதி மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவில் இருந்து 10 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.90 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1.17 லட்சமாகும்.


கைரேகை நிபுணர்கள் ரேகைகள் குறித்து ஆய்வு


ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு மொத்தம் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பு பணம், நகை, வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உலகநாதன், ஜானகிராமன், ராணி ஆகியோர் தனித்தனியே தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்தை தாலுகா போலீசார் பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.


மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.