தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 வீடுகளில் நகை மற்றும் வௌ்ளிப் பொருட்களை சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 


எல்.ஐ.சி மேலாளர் வீட்டில் திருட்டு


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் பெரம்பலூரில் உள்ள எல்.ஐ.சியில். மேலாளராக வேலை செய்து வருகிறார். இதற்காக சங்கர் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு குடும்பத்தினருடன் வந்துள்ளார். 


அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் மற்றும் அரை பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. வீடு வெகுநாட்களாக பூட்டப்பட்டு இருந்ததை நோட்டம் விட்டு பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.


பட்டீஸ்வரம் போலீசில் புகார்


உடனே சங்கர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பட்டீஸ்வரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.


இது குறித்து சங்கர் பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


உடையாளூரில் மற்றொரு திருட்டு


இதே போல் பட்டீஸ்வரத்தை அடுத்த உடையாளூர் பகுதியை சேர்ந்தவர் புதுமைவள்ளி (75). நேற்று முன்தினம் இவர் கடைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பீரோவில் பார்த்த போது அதில் இருந்த 22 கிராம் தங்க நகைகள் காணாது அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்தில் புதுமைவள்ளி புகார் கொடுத்தார். அதன்படி பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.