தஞ்சாவூர்: குடும்பத் தகராறு காரணமாக தஞ்சை கோரிக்குளம் பகுதியில் 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு தந்தையும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை புதுப்பட்டினம் கோரிக்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் முருகேசன் (42). ஜேசிபி ஆபரேட்டர். இவரது மனைவி சுகன்யா (29). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களின் மகள் நவ்யா ஸ்ரீ (4). மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுகன்யா தங்களின் ஒரு மாத ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது வீட்டில் முருகேசன் மற்றும் மகள் நவ்யா ஸ்ரீ மட்டும் தனியாக இருந்துள்ளனர்
பின்னர் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை முடித்து கொண்டு மதியம் சுகன்யா வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ளே முருகேன் மற்றும் நவ்யா ஸ்ரீ இருவரும் தனித்தனியாக சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்ததை கண்டு சுகன்யா அலறியுள்ளார். உடனே சுகன்யா உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முருகேசன் மற்றும் நவ்யாஸ்ரீயை டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வல்லம் டிஎஸ்பி., கணேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முருகேசன் கடந்த 2 மாதங்களாக முருகேசன் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தகராறு இருந்து வந்ததாம். இதில் மனஉளைச்சலில் இருந்த முருகேசன் தன் மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.