தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டி போடப்பட்டு இருந்த ஆட்டை திருடிக்கொண்டு ஸ்கூட்டியில் தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


குடும்பத்தின் வருவாய்க்கு உதவும் ஆடுகள்


நான்கு மாடுகள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும். ஆடுகள் இருந்தால் அந்த குடும்பத்தின் வருவாய் உயர்ந்து விடும் என்று கிராமங்களில் கூறுவர். இது உண்மையான ஒன்றுதான் மாடு மட்டுமல்ல... தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர வருமானம் கிடைக்கும் வகையில் கிராமங்களில் ஆடு, கோழிகள் வளர்ப்பையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயிர் சாகுபடி இல்லாத காலத்தில் குடும்பத்தை காப்பாற்ற மாடு, ஆடுகள், கோழிகள் உதவுகிறது.


மக்களின் வாழ்வோடு இணைந்தது


ஆட்டு இறைச்சி, பால், முட்டை என கால்நடைகளில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களுக்குமே சிறப்பான சந்தை வாய்ப்புகள் உள்ளன. அவசரத் தேவைக்கும் கால்நடைகளை விற்று உடனடியாகப் பணமாக்கலாம். கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தேவையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. இவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு இணைந்து வருவதில் முதன்மை வகிக்கின்றன ஆடுகள். இவற்றை திருடி விற்பனை செய்யும் கும்பலும் சமூகத்தில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இது.




ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர்கள்


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடிக் கொண்டு ஸ்கூட்டியில் இருவர் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


ஆட்டை லாவகமாக திருடினார்


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத்தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சரண்யா (30). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் தனக்கு சொந்தமான ஆட்டை கட்டி வைத்திருப்பது வழக்கம். இதையறிந்த மர்ம நபர் ஒருவர் அந்த தெருவில் யாராவது வருகிறார்களா? என்று சுற்றிப்பார்க்கிறார். அப்போது அந்த தெருவில் யாரும் வராத நேரத்தை பார்த்த அந்த மர்ம நபர் சரண்யா வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக கையில் தூக்கிக் கொண்டு தெருவிற்கு வருகிறார். 


சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்


அப்போது மற்றொரு மர்ம நபர் ஒரு ஸ்கூட்டியில் வருகிறார். இவர்கள் 2 பேரும் கூட்டாளிகள் என்று தெரிய வருகிறது. அந்த ஸ்கூட்டியில் வீட்டிற்குள் புகுந்து தான் திருடிய ஆட்டை லாவகமாக தூக்கிக்கொண்டு முதல் மர்மநபர் ஏறுகிறார். உடன் அந்த இருவரும் அந்த ஸ்கூட்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்  இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் பரவி சமூக வலைதளங்களில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர்


சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ஆட்டை திருடிய அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சிங் (32), சுரேஷ் (25) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஆட்டை பறிமுதல் செய்தனர். திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே ஆட்டை திருடிய குற்றவாளிகளை கைது செய்து, ஆட்டை மீட்ட காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.