ஏ.ஆர் ரஹ்மான்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத் துறையை உயிர்ப்பாக வைத்து வருகிறார் ஏ.ஆர் ரஹ்மான். இசையில் தொழில்நுட்பரீதியான புதுமை , கர்னாடக , இந்துஸ்தானி, ஜாஸ், வெஸ்டர்ன் , நாட்டுப்புற இசை என அவர் தொடாத இசை வகைமைகளே கிடையாது. ஃபிலிம்ஃபேர் முதல் ஆஸ்கர் வரை எல்லா விருதுகளையும் பாக்கெட்டிற்குள் போட்டுவிட்டார். தற்போது தனக்கு அடுத்த தலைமுறை இசையில் பல புதிய சாத்தியங்களை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
விருதுகளை குவித்தது போதும்
நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தற்போது தயாரித்துள்ளார் ரஹ்மான். இந்த ஆவணப்படத்தின் பணிகளோடு அங்கு இருக்கும் ஆசிரமம் ஒன்றை தத்தெடுத்து அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு இசைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
தனது அடுத்தக்கட்ட திட்டங்களைப் பற்றி ரஹ்மான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். இந்த நேர்காணலில் கேள்வி கேட்பவர் ரஹ்மானிடம் இப்படி கேட்கிறார் "நீங்கள் இரண்டு ஆஸ்கர் விருதுகள் , இரண்டு கிராமி விருது , ஒரு பாஃப்டா விருது , ஒரு கோல்டன் க்ளோப் விருது , ஆறு தேசிய விருதுகள் , 32 ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றிருக்கிறீர்கள். இதை எல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள்"
ரஹ்மானின் பதில் "இதில் சில விருதுகள் எனக்கு வந்து சேரவில்லை என் சார்பாக இயக்குநர்கள் இந்த விருதுகளை வைத்துக் கொண்டார்கள். சர்வதேச விருதுகள் எல்லாம் துபாயின் என் அம்மா பத்திரமாக வைத்திருக்கிறார். அவை எல்லாம் தங்கம் என்று நினைத்து அதை துணியில் சுற்றி அவர் வைத்திருக்கிறார். மற்றவை எல்லாம் சென்னையில் ஒரு அறையில் கிடக்கின்றன.
ஆனால் விருதுகளை சேர்ப்பதில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. இப்போது நான் எனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து புதிதாக என்ன செய்ய முடியும் என்பதையே தேடிக் கொண்டிருக்கிறேன் " என்று அவர் பதிலளித்தார்.
சொந்தமாக இணைதளம் தொடங்கிய ரஹ்மான்
தற்போது ரஹ்மான் A R Rahman.Com என்கிற இணையதளம் ஒன்றைத் தொடங்க இருக்கிறார். இந்த இணையதளத்தில் ரஹ்மானின் அனைத்துப் பாடல்களும் சிறந்த தரத்தில் கிடைக்கின்றன. மேலும் ரஹ்மான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரஹ்மான் மேற்கொண்டு வரும் இன்னும் பல முன்னெடுப்புகள் பற்றிய தகவல்களையும் இந்த தளத்தில் நாம் தெரிந்துகொள்ளலாம்.