நகைக் கடை ஊழியரிடம் 2 கோடி மதிப்பிலான தங்க நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் மேலவீதியை சேர்ந்தவர் மணி(52). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். சென்னையிலுள்ள மொத்த நகை வியாபார கடையில் வேலை பார்த்து வருகிறார். திருச்சி, தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு புதிய வகை மாடல் நகைகளை சென்னையில் இருந்து மணி கொண்டு வந்து விற்பது வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து பேருந்து மூலம் மணி திருச்சிக்கு வந்துள்ளார். அப்போது அவர், பையில் 7.2 கிலோ மதிப்பிலான தங்க நகையை தன்னுடன் கொண்டு வந்துள்ளார். அவர் எடுத்து வந்த நகைகளை திருச்சியில் உள்ள சில கடைகளில் விற்பனை செய்துள்ளார்.அதில் கிடைத்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்துள்ளார்.
நடந்தது என்ன?
பின்பு அவர் தஞ்சாவூர் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளதாக தெரிகிறது. அங்கும் அவர் கொண்டு வந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்துள்ளார். அதன்பின்னர் அவர் சென்னைக்கு மீண்டும் திரும்ப தயாராகி உள்ளார். அதற்கு முன்பாக அவர் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்து வந்த பையில் 5 கிலோ புதிய வகை மாடல் நகைகள் மற்றும் 1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகள், ரூ.14 லட்சம் பணம் ஆகியவற்றை தன்னுடன் எடுத்து சென்றுள்ளார். தான் கொண்டு வந்த பையை மணி ஹோட்டலில் உள்ள ஒரு நாற்காலியில் வைத்துவிட்டு பில் வாங்குவதற்காக சென்றார். அந்த சமயத்தில் ஒரே நிறத்தில் சீருடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த ஹோட்டலுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் நகைகள் மற்றும் பணம் இருந்த பையை எடுத்து கொண்டு ஹோட்டலை விட்டு வேகமாக வெளியே சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர் மணி தன்னுடைய பையை காணவில்லை என்பதை அறிந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பெயரில் ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் அந்தப் பகுதிக்கு அருகே இருந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் ஒரே மாதிரி வெள்ளைநிற சீருடையுடன் சிலர் நகைப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒரே சீருடை அணிந்து வந்த 9 பேர் இந்த பையை திருடியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் யார் மற்றும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. கொள்ளை போன நகையின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்