இவர் இருக்கிறார் என்றாலே படம் கண்டிப்பாக ஹிட் என்று படம் எடுப்பதற்கு முன்னதாகவே சொல்லிவிடும் தமிழ் சினிமா இருந்தது என்றால் இன்றுள்ள எவரும் நம்ப மாட்டார்கள். அவர் நடிகர் அல்ல, இசையமைப்பாளர் என்றால் நம்மை பைத்தியக்காரர் என்பார்கள். ஆனால் ஒருவர் ஆண்டுள்ளார், தமிழ் சினிமாவை. அவர் பாடலுக்காகவே ஓடிய படங்கள் என்று பழைய சினிமா காரர்கள் இன்றும் ஒரு வார்த்தை பயன்படுத்துவார்கள். அதில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் இருக்கும். 


ராசய்யா இளையராஜா ஆன கதை


ராசய்யா என்ற பெயரோடு, இசை வெறியோடு சென்னை வந்து சேர்ந்த இளைஞன், மிக இளமையிலேயே நம்மை ஆள ஆரம்பித்ததாலோ என்னமோ, இளைய ராஜா என்று பெயர் பெறுகிறார். அண்ணன் பாவலர் கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை கச்சேரிகள் நடத்த, அவரோடு பயணித்து இசை கற்கிறார். சினிமாவில் இசை என்றாலே எம்.எஸ்.வி என்றிருந்த காலத்தில், அவரிடமே அசிஸ்டண்டாக சேர்ந்து பிற்காலத்தில் அவரையே முந்தியவர். சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்கு முன்பு 20 கிலோமீட்டர் வரை நடந்தே சென்று அண்ணனை பார்த்தால் ஒரு டீ வாங்கி தருவார் என்று தன் இளமை காலங்களை பற்றி அவரே பல இடங்களில் கூறியுள்ளார். கஷ்டங்களுக்கும் புறக்கணிப்புககுக்கும் இடையில் எப்படியோ ஒருவழியாக முட்டி மோதி சான்ஸ் கிடைக்க… ஒலிக்கிறது 'அன்னக்கிளி உன்ன தேடுது…' அன்றுமுதல் தமிழ் சினிமாதான் தேடுது இளையராஜாவை. 



தொடர்ந்து ஹிட் பாடல்கள்


முதல் படத்திலேயே அத்தனை பாடல்களும் ஹிட்டாக, கோலிவுட்டின் ஹாட் மியூசிக் டைரக்டர் ஆக வெகு நாட்கள் எடுக்கவில்லை. தொடர்ந்து உழைக்கும் வர்க்கத்தினரின் இசையாக ஒலித்த அவரது பாடல்கள் நம்மூர் வயல் வெளிகளிலும், மேடைகளிலும், கோவில் திருவிழாக்களிலும், பேருந்துகளிலும், டீக்கடையிலும் என எல்லா ரேடியோ பெட்டிகளையும் நிறைத்தன. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என ரசிகர்கள் கூட, அவரன்றி ஹிட் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தமிழ் சினிமாவின் பிம்பமாக வந்து நின்றார். கேரள மக்களுக்கோ, ஆந்திர மக்களுக்கோ நம்மை விட அதிகமாக இந்தி பாடல்கள் தெரிந்திருக்கும். அதற்கு ஒரே காரணம் நம்மிடம் இளையராஜா இருந்ததுதான். நல்ல பாடல்கள் தேடி வேறு மொழிகளுக்கு செல்ல வேண்டிய நிலையை அவர் நமக்கு தந்ததே இல்லை.


June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


எதிர்ப்புகளுக்கு மத்தியில்


கர்நாடக இசையை மட்டுமே ஒலிபரப்பும் ஆல் இந்தியா ரேடியோ இவரது பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று சர்குலர் வெளியிட்டதெல்லாம் தாண்டி வெறும் மக்கள் ஆதரவால் மட்டுமே இங்கு வந்து நிற்கிறார். ஓரம்போ ஓரம்போ பாடல் தொடங்கி பல பாடல்கள் சாமான்யர்களின் இசையாக ஒலிக்க இளையராஜா தமிழகத்தின் இண்டு இடுக்கெங்கும் சென்று சேர்கிறார். ஒடுக்கப்படும்போதெல்லாம் பாளையம் பண்ணையப்புரம் சின்னத்தாயி பெத்தமவன் மேலேறியே வந்துள்ளார்.



சாதனைகள்


இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1,450 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்திய அரசின் விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்ற இவர், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். 


அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், சர்ச்சைகள் சூழ்ந்து இருக்கலாம், ஏற்றம் இருக்கலாம், இறக்கம் இருக்கலாம்… ஆனால் இன்றுவரை மனம் சஞ்சலப்பட்ட நேரத்தில் எல்லாம் சென்று அண்டிக்கொள்ள அவரைவிட்டால் வேறு யாரும் இல்லை. தமிழகத்தில் பல ஆயிரம் தற்கொலைகளும், கொலைகளும் இவரால் தடுக்கப்பட்டிருக்கும் என்பார் மிஷ்கின், அது ஒருபோதும் மிகையாகாது.