தஞ்சாவூர்: ஆன்லைனில் லோன் வழங்குவதாக கூறி 17 மாவட்டங்களில் 31 பேரிடம் ரூ.17.50 லட்சம் மோசடி செய்த தில்லாங்கடி நபர்கள் 2 பேரை தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலை பி.எஸ்.என்.எல்., ஊழியர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (46)க்கு டாடா கேபிட்ல் என்ற நிறுவன லோகோவுடன், ஆன்லைன் மூலம் லோன் பெறுவதற்காக, தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 2.50 லட்சம் ரூபாய் லோன் கிடைக்கும் என குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. இதை பார்த்த சுரேஷ் அந்த வாட்ஸ் அப்பில் வந்த மொபைல் எண்ணுக்கு தொடர்புக் கொண்டுள்ளார். 


மறுமுனையில் பேசிய மர்மநபர், சுரேஷின் ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ, வங்கி விபரங்களை கேட்டு பெற்றுள்ளார். சுரேஷூம் அந்த நபர் கேட்ட விபரங்களை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் ஒரு விண்ணப்பம் ஒன்றை சுரேஷக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி, அதை பூர்த்தி செய்ய கூறியுள்ளார். அத்துடன் லோன் பெறுவதற்கு குறைந்தது வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் இருக்க வேண்டும் எனவும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.


பின்னர் சுரேஷிடம், நீங்கள் அளித்த தகவல்கள் சரியானது தானா என உறுதி செய்ய வேண்டும். எனவே உங்களின் ஏ.டி.எம்., விபரங்களை தாருங்கள் என்று அந்த மர்மநபர்  கேட்டுள்ளார். இதை நம்பிய சுரேஷ் ஏடிஎம் பின் நம்பர் உட்பட அந்த மர்மநபர் கேட்ட விபரங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து சுரேஷின் வங்கி கணக்கிலிருந்து 24,955 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் போனில் பேசிய மர்ம நபரிடம் கோபமாக ஏன் பணம் எடுத்தீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்து விட்டார்.


பின்னர் சுரேஷ் பலமுறை அந்த போன் நம்பருக்கு தொடர்புக்கொண்டும் எவ்வித பதிலும் இல்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ், கடந்த ஜூன் 25ம் தேதி சைபர் கிரைம் ஆன்லைனில் புகார் அளித்தார். மேலும், கடந்த ஜூலை 1ம் தேதி தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் நேரில் சென்று புகார் செய்தார். இது குறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார், காவல் கண்காணிப்பாளர் தேவராணி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் அமைக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த மர்ம நபரின் மொபைல் எண் சிக்னல்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


அப்போது, அந்த மர்ம நபர் அரக்கோணத்தில் இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற சைபர் கிரைம் போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கார்த்திசன் (34), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் சுரேஷ் (34) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். 


மேலும், அவர்களிடம் இருந்து 42 மொபைல்கள், 37 மொபைல் சார்ஜர்கள், பயன்படுத்தப்படாத 19 சிம்கார்டுகள், பயன்பாட்டில் இருந்த 21 சிம்கார்டுகள், 3 அலுவலக வருகைப்பதிவேடு நோட்டு புத்தங்கள், பணம் செலுத்தியவர்களின் விபரங்கள் அடங்கிய 13 புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். 


தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அரக்கோணம் பகுதியில் ஐ.டி.நிறுவனம் என்ற பெயரில், மூன்று அலுவலகங்களை வைத்து நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் தஞ்சாவூர், திண்டுக்கல், தருமபுரி, கோவை, கடலுார், மதுரை, புதுச்சேரி என 17 மாவட்டங்களில் இதுவரை 31 பேரிடம் சுமார் 17.50 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.


மேலும், கைது செய்யப்பட்ட சுரேஷ், கார்த்திசன் இருவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை,பண மோசடி வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சுரேஷ், கார்த்திசன் இருவரையும் தஞ்சை கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.