விழுப்புரம் :  திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து டயர் வெடித்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 15-க்கும் மேற்பட்டோர் காயம்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு பகுதியில் நேற்று (டிசம்பர் 11, 2025) மாலை நிகழ்ந்த கோர விபத்தில், ஆம்னி பேருந்து டயர் வெடித்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

 டயர் வெடித்து நிகழ்ந்த சோகம் !

சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, திண்டிவனம் அருகே உள்ள கேணிப்பட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து நிலைதடுமாறி, சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.

Continues below advertisement

உயிரிழப்பு மற்றும் காயம்

இந்தச் சோகமான விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த கமலக்கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், பேருந்தில் பயணம் செய்த பதினைந்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆபத்தில் உதவிய ஆட்சியர்  மற்றும் மீட்புப் பணி

இந்த விபத்து நடந்த அதே நேரத்தில், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அவர்கள், விபத்தின் தீவிரத்தைக் கண்டு உடனடியாகத் தலையிட்டார். அவர் தாமதிக்காமல் அவசர ஊர்திகளை வரவழைக்க உத்தரவிட்டார்.

காயமடைந்த பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த கமலக்கண்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த கோர விபத்து காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

விசாரணை தீவிரம்

இந்த விபத்து குறித்து திண்டிவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் மற்றும் பேருந்தின் ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.