மேற்குவங்கம் பகுதியை சேர்ந்தவர் பிரந்தர் சக்கரவர்த்தி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து வருகிறார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்கின்ற பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார்.
நகை, பணம் கொள்ளை:
பின் மறுநாள் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் அங்கு சென்று பார்க்கும் பொழுது வீடு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து பிரந்தர் சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 14 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் மற்றும் சில பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
டிப்டாப் ஆசாமி:
அப்போது சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளை அடிக்க வந்த நபர் டிப்டாப்பாக முகக் கவசம் அணிந்தபடி ஒரு காரில் வந்து இறங்கி கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து, அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்தக் கார் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி விரைந்த குற்றாலம் போலீசார் அங்கு வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, குற்றாலம் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வேல்முருகன் ஈடுபட்டதும், அவருடன் புதுக்குடி பகுதியை சேர்ந்த டேனியல் பிரகாஷ் (வயது 38) மற்றும் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 35) ஆகிய இருவரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மூவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மூவரும் அந்த வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளனர்.
பெரும் பரபரப்பு:
அங்கு வைத்து மூவரும் நண்பர்களாக பழகி பின் வெளியே வந்து பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் போல் டிப்டாப்பாக உடையணிந்து நோட்டமிட்டு காரில் வந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 78 கிராம் தங்க நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து, அவர்கள் மூவரையும் செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். டிப் டாப்பாக குற்றாலம் பகுதிக்கு சுற்றுலா வந்தது போல் உலா வந்து, அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவம் குற்றாலம் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.