தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது வீட்டில் கடந்த 4 ஆம் தேதி பராமரிப்பு பணி மேற்கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த செப்டிக் டேங்கிற்குள் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலும்பு கூடாக மீட்கப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்து செப்டிக் டேங்கிற்குள் போட்டது யார்? மேலும், இலத்தூர் பகுதியில் அதிக நாட்கள் காணமால் போன நபர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இலத்தூர் பகுதியை சேர்ந்த மது என்ற மாடசாமி எனும் கல்லூரி மாணவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததும், அது தொடர்பான வழக்கு இலத்தூர் காவல் நிலையத்திலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது.
பின் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூட்டில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவையும், காணாமல் போன கல்லூரி மாணவரான மதுவின் உறவினர்களிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவையும் சோதனை செய்து பார்த்தனர். அப்போது இரண்டும் ஒத்துபோன நிலையில் மது என்ற மாடசாமி தான் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மது எப்படி கொலை செய்யப்பட்டார்? அவரை செட்டிக் டேங்கிற்குள் புதைத்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர், மேலும் மது வீட்டின் அருகே உள்ள அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். குறிப்பாக மது காணாமல் போன நாள் முதல் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் கோவைக்கு வேலைக்கு சென்றதும், அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என அக்கம் பக்கத்தினர் பரவலாக தெரிவித்துள்ளனர். உடனே கோவை விரைந்த இலத்தூர் போலீசார் குடும்பத்துடன் கோவையில் இருந்த மாரியம்மாள், இசக்கியம்மாள் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட மூவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதாவது, கல்லூரி மாணவரான மாடசாமி (எ) மதுவுக்கும், அவரது வீட்டின் எதிரே உள்ள திருமணமான பேச்சியம்மாள் (வயது 24) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர். அப்படி ஒருநாள் இருவரும் தனிமையில் இருந்தபோது மது தனது செல்போனில் இருவரின் தனிமையை வீடியோவாக எடுத்து அதை வைத்து பேச்சியம்மாளை மிரட்டி அடிக்கடி உறவு கொண்டதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில், மதுவின் தொந்தரவு அதிகமாக பேச்சியம்மாள் இந்த சம்பவம் தொடர்பாக அவரது தாயார் மாரியம்மாளிடம் நடந்ததை கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தை மது தனது கணவரிடம் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என கூறியதை அடுத்து இருவரும் திட்டமிட்டு மதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இச்சூழலில் மதுவை தனிமையில் சந்திக்க பேச்சியம்மாள் அழைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற மதுவிடம் பேச்சியம்மாள் ஒரு ஆபாச வீடியோவை காட்டி அது போல நாமும் உறவு கொள்வோமா என கேட்டுள்ளார். உடனே, மதுவும் சரி என்று கூறியதாக தெரிகிறது. பின் அந்த ஆபாச வீடியோவில் இருந்த காட்சிகளை போல் மதுவின் கை, கால்களை பேச்சியம்மாள் கட்டியுள்ளார். தொடர்ந்து, மதுவிடம் உறவு வைத்து கொள்வது போல் நடித்து அவரது கழுத்தை நெறித்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், மதுவின் உடலை பேச்சியம்மாள் மற்றும் அவரது தாயான மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் உதவியுடன் லட்சுமணன் என்பவரது வீட்டின் செப்டிக் டேங்கில் போட்டு மதுவின் உடலை மூடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலையை செய்த பேச்சியம்மாள், மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரர் தங்கபாண்டி உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான பெண்ணின் மீது கொண்ட ஆசையால் வாலிபர் ஒருவரின் உயிர் பறிபோனதும், அவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டு வேறு ஊருக்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில் தற்போது விசாரணையில் மாட்டிக்கொண்டு 3 பேர் கம்பி எண்ணி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.