தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது வீராணம் ராஜா தோட்டம். இப்பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு சொந்தமாக வீடுகள் இருக்கும் நிலையில் அதில் ஒரு வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு பேச்சியம்மாளின் சகோதரி கருத்தாத்தாள்(60) கேட்டு வந்துள்ளார்.
அடித்துக்கொலை:
அதற்கு பேச்சியம்மாள் மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறிது நாள் கழித்து அதாவது கடந்த 24.08.2014 அன்று பேச்சியம்மாளின் கணவர் கருப்பசாமி மதுரைக்கு சென்றுள்ளார். இதனையறிந்த கருத்தாத்தாள் தனது கணவர் பிச்சையா, மகன் துரைமுத்து, மகள் மாரியம்மாள் ஆகியோருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று வீட்டை எழுதி தருமாறு பிரச்சினை செய்துள்ளனர். அப்போது பேச்சியம்மாள் மறுக்கவே அவரை 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் வீட்டிற்கு வந்த கருப்பசாமி தனது மனைவி காயமடைந்த நிலையில் எழுந்து நடக்க முடியாமல் கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததோடு என்ன நடந்தது என்று விசாரித்த போது உண்மை தெரிய வந்துள்ளது. பின் பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை:
இது குறித்து கருப்பசாமி வீரகேரளம்புதூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணையானது தென்காசி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இருக்கும் போதே முன்னதாக பிச்சையா உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகிய மூன்று பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜராகினர். அப்போது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். கடந்த 9 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்