சேலம் மாவட்டம் பனங்காடு அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகள் பாடம் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் சுரேஷ் பாபு என்பவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாணவிகள் கழிவறை இருக்கும் பகுதிக்கு சென்று எட்டிப் பார்ப்பதாக கூறி, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் மதுபோதையில் இருந்துள்ளார்.
பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷ் பாபுவை கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுதொடர்பாக சூரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷ்பாபுவிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பள்ளியில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு கல்லுடன் காத்திருந்ததனர். பின்னர் தொடக்ககல்வி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், தாசில்தாரர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மூன்று பெற்றோர்களிடம் புகார் மனு பெற்றுக்கொண்டனர். விசாரணைக்கு பிறகு அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், இந்த ஆசிரியர் தொடர்ந்து பள்ளி மாணவிகளிடையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், எப்பொழுது வந்தாலும் மதுபோதையிலையே வகுப்புகளுக்கு வருவதாக குற்றம்சாட்டினர். ஏற்கனவே மூன்று முறை தவறு செய்தபோது கண்டித்து தலைமை ஆசிரியரிடம் குற்றம்சாட்டையும் நடவடிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் இந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்து, சட்ட நடவடிக்கையின் மூலமாக கைது செய்யவேண்டும் என்று கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர். இந்த பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். இதனிடையே ஆசிரியர் வெளியே வந்தால் அடித்துக் கொலைசெய்யமால் விடமாட்டோம் என்று பள்ளியின் முன்பாக பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.