கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவிகளால் தலைமை ஆசிரியர் சரமாரியாக தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ள நிலையில் இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் சின்மயமூர்த்தி என்பவர் கடந்த சில மாதங்களாகவே மாணவிகள் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அவ்வாறு வரும் போதெல்லாம் பள்ளியில் தனது அறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஆபாச வீடியோக்களை காட்டி அவர்களை துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. சின்மய மூர்த்தியின் இந்த கொடூர செயலால் மாணவிகள் கடும் கோபத்தில் இருந்தனர். இதனிடையே நேற்று முன் தினம் இரவு மாணவிகள் விடுதிக்கு வழக்கம்போல சின்மயமூர்த்தி வந்துள்ளார்.
அங்கு தனது அறைக்கு ஒரு மாணவியை வரவழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாணவி சின்மயமூர்த்தி அறையில் இருந்து கதறி கூச்சல் போட்டபடி வெளியே ஓடி வந்தார். உள்ளே நடந்த சம்பவம் பற்றி சகமாணவிகளிடம் கூறி அழுதுள்ளார். இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்ற மாணவிகள் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சின்மயமூர்த்தி அறைக்கதவை மூட முயன்றுள்ளார்.
ஆனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மாணவிகள் அவரை சரமாரியாக தாக்கினர். தான் தவறு செய்யவில்லை என சின்மயமூர்த்தி தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி அவர் பொய் சொல்வதாக தெரிவித்ததால் தாக்குதல் அதிகமானது. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்து மக்களுக்கும் தெரிய வந்த நிலையில் அவர்களும் வந்து சரமாரியாக சின்மயமூர்த்திக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சின்மயமூர்த்தியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவிகள் மட்டுமல்லாது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலரையும் தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும், அதனை வீடியோ பதிவு செய்து மாணவிகளுக்கு காட்டியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் தனது விருப்பத்துக்கு இணங்காத மாணவிகளை தேர்வில் மதிப்பெண்களை குறைப்பேன் என்றும், டி.சி. தந்து பள்ளியை விட்டு அனுப்பி விடுவதாகவும் சின்மயமூர்த்தி மிரட்டியுள்ளார். இதனால் மாணவிகள் பயந்து போய் இத்தனை நாட்களாக வெளியே சொல்லாமல் இருந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சின்மயமூர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.