பட்டியலினப் பெண், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீரை குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேறொரு இடத்தைச் சேர்ந்த பட்டியலினப் பெண், ஹெக்கடோரா கிராமத்திற்கு வந்து, ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்தார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சில ஆதிக்க சாதியின கிராம மக்கள் பொது சேமிப்பு தொட்டியில் இருந்து குடிநீரை வெளியேற்றிவிட்டு, மாட்டு சிறுநீரைக் கொண்டு "சுத்திகரித்தனர்" என தகவல் வெளியாகியுள்ளது
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, தாசில்தார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். “கடந்த வெள்ளிக்கிழமை, அந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்தில் ஒரு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள ஹெச்.டி.கோட்டிலிருந்து பெண் ஒருவர் வந்தார். பொதுத் தொட்டியில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அவசரமாக பேருந்தில் ஏறினார். கிராம மக்கள் விரைந்து அந்த பெண்ணை மிகத்தவறான வார்த்தைகளால் திட்டி, தொட்டியை சுத்தப்படுத்த முடிவு செய்தனர்” என்று சம்பவ இடத்தை சேர்ந்த ஒருவர் கூறினார். வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம கணக்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து சம்பவத்தை உறுதி செய்தனர். பின்னர் அதிகாரிகள் தாசில்தாரிடம் அறிக்கை அளித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தாசில்தார் ஐ.இ.பசவராஜு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் தேக்க தொட்டி பொது சொத்து என்றும், அதில் உள்ள தண்ணீரை அனைவரும் குடிக்கலாம் என்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். தாசில்தார் 20 பட்டியலின இளைஞர்களை கிராமத்தில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்களுக்கும் அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்க வைத்தனர். “சமூக நலத் துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து புகாரைப் பதிவுசெய்ய முயன்று வருகின்றனர். சாமராஜநகர் ஊரக காவல் நிலையத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்” என்று தாசில்தார் பசவராஜு கூறினார்.
மேலும் டொட்டியை சுத்தம் செய்ததை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தினர். விரைவில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் அளித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இச்சம்பவம் குறித்து பதிலளித்த சாமராஜநகர மாவட்டப் பொறுப்பாளர் வி.சோமண்ணா, இதுபோன்ற பாரபட்சத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.