திருச்சியிலிருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்த மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள் இருந்த கைப்பையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சிலேயே கைவரிசையை காட்டிய மர்மநபர்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி தேவாரம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கௌசல்யா (62). கடந்த 14ம் தேதி தனது கணவருடன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு கௌசல்யா பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். இவர் தனது கைப்பையில் ஒரு பர்சில் 15 சவரன் தங்க நகையை வைத்திருந்தார். அப்போது வல்லம் மின்நகர் பகுதியில் இறங்குவதற்காக எழுந்தபோது தனது கைப்பையில் நகை வைத்திருந்த பர்ச்சை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பைக்கை வேகமாக ஓட்டியதை கண்டித்ததால் கோஷ்டி தகராறு: தஞ்சை அருகே பைக்கை சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றதை கண்டித்தால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே ஜெபமாலை புதுத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி புகழ்மணி (45). இதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (43). இவருக்கு 17 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயக்குமாரின் 14 வயது மகன் பைக்கில் வெகு வேகமாக ஜெபமாலைபுரம் பகுதியில் சென்றுள்ளார். இதை ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது தந்தை ஜெயக்குமாரிடம் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜெயக்குமார் மற்றும் அவரது இரு மகன்கள், அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் ஜெயக்குமார் உட்பட 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரன் மற்றும் புகழ்மணியை கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகழ்மணி கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், 14 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோல் ஜெயக்குமாரின் மனைவி ஜூலியட் மேரி கொடுத்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன், அவரது மனைவி புகழ்மணி, அப்பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணுவின் மகன் பாரத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த கோஷ்டி மோதல் தகராறு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.