இணையம் இருமுனை கத்தி. பாதுகாப்பாக கையாளாவிட்டால் காயம் நிச்சயம். அது தெரிந்தும் கூடவே படித்த நபர்களும் கூட இணையவழி குற்றங்களுக்கு இரையாகிவிடுகின்றனர். 


அவ்வப்போது காவல்துறையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்தவகையில், தமிழக காவல்துறையில் தென் மண்டலம் சார்பில் ஃபேஸ்புக்கில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்லைடுகள் மூலம் அந்தப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் ஸ்லைடுகளில், "ஆன்லைன் ஜாக்கிரதை. இணையத்தில் எவ்வளவு நெருங்கினாலும் விலகியே இரு. எத்தனை நல்லவர் என்றாலும் தள்ளியே இரு. நேரில் பேசும்போது கலைந்துவிடும். இணையத்தில் பேசுவது எங்கோ பதிந்து கொண்டே இருக்கும். புகைப்படம் பகிரும் முன் பலமுறை சிந்தனை செய். பகிர்ந்த பின் சிந்தித்து பயன் இல்லை. ஆன்லைன் என்பதும் ஆனியன் என்பதும் ஒன்றுதான். உரிக்க உரிக்க ஒன்றுமில்லை" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஜாக்கிரதை, விலகியே இரு, தள்ளியே இரு, சிந்தனை செய், ஆன்லைன், ஆனியன் போன்ற வார்த்தைகள் சிவப்பு நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன. 




பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு இந்த அறிவுரை மிகவும் பொருத்தமானதாக இருக்கும். கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எல்லா மாணவ, மாணவிகள் கைகளிலும் செல்போன் எளிதாகக் கிடைத்துவிட்டது. இந்நிலையில், சில சமூக விரோதிகள் இளம் பெண்களை ஆன்லைனில் குறிவைத்து தங்களின் வஞ்சக வலையில் விழவைக்கின்றனர். லாக்டவுனுக்குப் பின்னர் பள்ளி மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்ற இளைஞர், கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய இளைஞர் போன்ற செய்திகள் அன்றாடம் ஒன்றாவது வந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது.



இத்தகைய சூழலில் சிறுமிகள், இளம் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இணைய பயன்பாடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இணையத்தில் பேசும் வஞ்சகர்கள் உங்களின் தனிப்பட்ட விவரங்களைத் துருவி துருவி கேட்டாலே உஷாராகிவிட வேண்டும். குறிப்பாக முன்பின் தெரியாதவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது சரியான இணையப் பழக்கம். என்னதான் உங்களின் காதலர், கணவர் என்றிருந்தாலும் கூட இணையத்தில் அந்தரங்க புகைப்படத்தைப் பகிராதீர்கள்.




நீங்கள் உங்கள் கேலரியில் இருந்து புகைப்படத்தை அழித்துவிட்டாலும்கூட அது க்ளவுடில் சேமிக்கப் பட்டிருக்கும். ஆகையால் அந்தரங்கப் படங்களை எக்காரணம் கொண்டு பகிராதீர்கள். இப்போது இணையத்தில் ஆபாச சேட் செய்வதும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பேசும்போது, அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துக் கொண்டு பிளாக் மெயில் செய்யும் கும்பலும் இருக்கின்றன. அதனால், ஆபாச சேட் செய்யாதீர்கள். உண்மையான காதல் உறவை இணையத்தில் தேடாது. காதல் எது காம வலை எது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது போல் ஆன்லைனும் ஆனியனும் ஒன்றுதான். உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. நீங்கள் அழித்துவிட்ட குறுந்தகவல்களும், புகைப்படங்களும் உண்மையாக அழிக்கப்பட்டவை அல்ல. அதனால் ஆன்லைன் ஜாக்கிரதை அவசியம்.