காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது அதிகரித்தது, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லும் சம்பவங்கள் அதிகரித்தது, தற்போது கத்தியால் குத்தி கொல்லும் சம்பவங்களும் மக்களிடையே பெரும் அச்சத்தை கிளப்பி வருகிறது. காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா தொடங்கி இப்போது வேளச்சேரி இந்துஜா வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. 2012ல் வெளிவந்த ஒரு சினிமாவில் ஒருதலை காதலால் பெண்ணைப் பழிவாங்க ஆசிட்டை ஒரு ஆயுதமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும். அந்த வருடத்தில் வினோதினி, வித்யா உள்ளிட்ட பெண்கள் மீது ஒரு தலைக்காதல் காரணமாக ஆசிட் வீச்சு நடந்தது. கடந்த காலங்களில் பல பெண்கள் ஒருதாலை காதலுக்கு பலியாகினர். கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜூன் 24ம் தேதியன்று பணிக்கு செல்வதற்காக காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபரை ஜூலை 1ம் தேதி இரவு கைது செய்ததாகவும், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டதாகவும், வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.



தற்போது கர்நாடக மாநிலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதாகும் உஷா, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வயதாகும் கோபாலகிருஷ்ணா என்பவரும் வேலை பார்த்து வந்து இருக்கிறார். இந்தநிலையில் உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒரு தலையாக காதலிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் உஷாவிடம், கோபாலகிருஷ்ணா தனது காதலை தெரிவித்த நிலையில், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், அதனால் இனிமேல் தன்னை இந்த விஷயமாக தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் உஷா கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் உஷாவை, கோபாலகிருஷ்ணா சந்தித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார். 



ஆனால் அதற்கு உஷா எதிர்ப்பு தெரிவித்து அவர் காதலை மறுத்துள்ளார். தன் காதலை ஏற்காததால் கடும் கோபமடைந்த கோபாலகிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உஷாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த உஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து கோபால கிருஷ்ணா தனது இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு பலியாகி கிடந்த உஷாவின் உடலை மீட்டனர். பின்னர் தற்கொலை செய்துகொண்ட கோபாலகிருஷ்னா உடலையும் மீட்டுள்ளனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியினர் இடையே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.