தமிழ்நாட்டையே உலுக்கிய கொலை சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளர் ஸ்வாதி கொலை. நுங்கம்பாக்கம்  ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி காலை அடையாளம்  தெரியாத நபரால் ஸ்வாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு குறித்த மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியது.


நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அவசர அவசரமாக ஒரு இளைஞர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் ராம்குமார் எனவும்  திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் என்றும், விடுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் ஸ்வாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்துவந்ததாகவும், அவர் செல்லும் கோயிலுக்கு ராம்குமாரும் தொடர்ந்து சென்றார் எனவும் கூறப்பட்டது.




அதுமட்டுமின்றி  ஸ்வாதி கொலை நடந்த சில நாள்களில் ராம்குமாரின் விடுதி அறையில் ரத்தக்கறையுடன் ஒரு சட்டை கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து ராம்குமார்தான் ஸ்வாதியை கொலை செய்தார் எனவும் காவல் துறையினர் கூறிவிட்டு மீனாட்சிபுரத்தில் இருக்கும் ராம்குமாரை கைது செய்வதற்காக சென்றனர். அப்போது தன்னை போலீஸ் சுற்றிவளைத்ததை தெரிந்துகொண்ட ராம்குமார் வீட்டுக்கு பின்புறம்  சென்று ப்ளேடால் தனது கழுத்தை 2016 ஜூலை ஒன்றாம் தேதி அறுத்துக்கொண்டார்.


இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துவிட்டு புழல் சிறையில் அடைத்தனர். அதேசமயம், ஸ்வாதி கொலையில் ராம்குமாருக்கு தொடர்பு இல்லை.இந்த விவகாரத்தில் வேறு பல விஷயங்கள் புதைந்திருக்கின்றன.அதை மறைப்பதற்காக ராம்குமாரை காவல் துறையினர் பலிகடா ஆக்கியிருக்கின்றனர் எனவும் ஒரு தரப்பினர் கூறிவந்தனர். ஆனால் ஸ்வாதியை கொன்றது ராம்குமார்தான் என்பதில் காவல் துறையினர் தீர்க்கமாக  இருந்தனர்.




நிலைமை இப்படி இருக்க,  அதே ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி புழல் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த ராம்குமாரின் பெற்றோர் இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கும்  தொடர்ந்தனர்.


இதனையடுத்து சிறை துறை மருத்துவர்கள் தரப்பில் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது திருப்பமாக அமைந்தது.




இந்த சூழலில், பிரேத பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறை மருத்துவர் நவீன் ஆகியோர் நேற்று வாக்குமூலம் அளித்தனர். அப்போது ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டரா? என்று நவீனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ராம்குமாருக்கு இதயதுடிப்பு இல்லாததால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும், ஈ.சி.ஜி எடுத்த பிறகே இறந்ததாக கூறமுடியும் என்பதால் இதயதுடிப்பு நின்றுவிட்டது என கேள்விகுறியுடன் சான்று வழங்கியதாகவும் நவீன் பதிலளித்தார். 




இதற்கிடையே ராம்குமாரின் உடலில் 4 சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதர் கூறியிருந்தார். ஆனால், காயங்கள் ஏதும் இல்லை எனவும், மேல் உதட்டில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறி தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். 


மருத்துவர்கள் அளிக்கும் மாறுபட்ட தகவல்களால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ள சூழலில் இதன் அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண