தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.  இந்த தொடர் மழையால் நாகை மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். இதையடுத்து சேதமடைந்த பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இந்த நிலையில், மழை பாதிப்பு சேதங்களை பார்வையிட மத்திய என்று ஆய்வு செய்தனர்.

 



 

மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், விஜய் ராஜ் மோகன், ரனன்ஜெய் சிங், வரப்பிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை பார்வையிட்ட குழுவினர் நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சி, வடவூர் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள விவசாயிகளிடம் பாதிப்பு குறித்த கேட்டறிந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கு மாவட்டத்தில் மழையால்  பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்தியக் குழுவினரிடம் கொடுத்தனர்.

 



 

அதில் தமிழகம் தொடர்ந்து இரு பருவ மழை மற்றும் புயல் பாதிப்பினால் ஆண்டுதோறும் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவித்திட வேண்டும், பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம் நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 10,000 இடுபொருள் இழப்பீடாக வழங்கிட வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் இறுதிவரை தொடர்வதால் ஆண்டுதோறும் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை முன்னர் இருந்தது போல் டிசம்பர் மாதம் இறுதி வரை செலுத்த அவகாசம் வழங்கிட வேண்டும், காப்பீடு நிறுவனங்களை கண்காணிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும்.

 

தொடர்ந்து மகசூல் இழப்பு ஏற்படும் கிராமங்களுக்கு ஏழு ஆண்டுகள் கணக்கிட்டு மகசூல் இழப்பு தொடர்ந்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க மறுப்பதை கைவிட வேண்டும், காப்பீட்டு துறையில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கைவிட்டு தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் மட்டுமே காப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும், காப்பீடுகளுக்கான பிரீமியத்தில் மத்திய அரசின் பங்குத் தொகையான 49 சதவீதத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக 33 சதவீதமாக குறைத்துள்ளது கைவிட்டு மீண்டும் 49 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவினை மத்திய குழுவிடம் விவசாயிகள் வழங்கினார். நாகையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மத்திய குழுவினர் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை சேதத்தை பார்வையிட சென்றனர். மத்திய குழுவினர் நாகை மாவட்டத்தில் ஆய்வின் போது தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், வேளாண்மை துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.