நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவருக்கு மனைவி சரஸ்வதி (47) மகன் உதயசங்கர் (20), மகள் சுதா (22) ஆகியோர் உள்ளனர்.  அதே பகுதியில் சுதாவின் தாய் மாமன் பெரியசாமி (60) வசித்து வருகிறார். அவரது மகன் சுப்பையா (24). சுப்பையாவும், சுதாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுப்பையாவிற்கு இரண்டு அண்ணன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பையா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பயிர்க் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.




இதனையறிந்த பெற்றோர் சுப்பையாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து சுப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனால் சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர்.  இச்சம்பவத்தால் மனமுடைந்த சுதா வீட்டில் தனியாக இருந்த  நேரத்தில் கதவுகளை உள்பக்கமாக தாழிட்டு  தூக்கில் தொங்கி உள்ளார்..  சுதாவின் பெற்றோர் நேற்று சுப்பையாவின் இறுதி சடங்கை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பது கண்டு சந்தேகம் அடைந்தார். மேலும் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சுதாவின் தாய் அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கில்  தொங்கிய படி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.. இதனை பார்த்து அங்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் உடலை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். . தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி இது குறித்து விசாரணை நடத்தினார் .




இதனிடையே நாங்குநேரி அரசு மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் சுதாவின் உடலை பரிசோதனைக்காக பாளையங்கோடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.  இதை அறிந்த சுதாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்  நாங்குநேரியில் பிரேத பரிசோதனைக் கூடம் இருந்தும் மருத்துவர்கள் இறந்தவர்களின் உடல்களை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், முறையாக அவர்கள் பணிக்கு வருவதில்லை எனவும் குற்றம் சாட்டிய அவர்கள் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுதாவின் உடலை நாங்குநேரிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்ய முயற்சி மேற்கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி ஏஎஸ்பி., ரஜத் சதுர்வேதி அவர்களை சமாதானப்படுத்தி நாங்குநேரியில் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  அதனைத் தொடர்ந்து சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். காதல் ஜோடி தற்கொலை குறித்து நாங்குநேரி போலீசார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். அவசரத்தில் முடிவு எடுத்து காதல் ஜோடியான சுப்பையா மற்றும் சுதா தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060