சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வடமாநிலத்தை சேர்ந்த பவாரியா என்ற கொள்ளை கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்து காவலாளி கோபாலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த கும்பல் தாளமுத்து நடராஜனின் மகன்களை அடித்து காயப்படுத்தி விட்டு தனி அறையில் அடைத்து வைத்தது. பின்னர் வீட்டில் இருந்து 250 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தாளமுத்து நடராஜன் இருந்த அறையின் கதவை தட்டிய போது, துப்பாக்கியுடன் வெளியே வந்த தாளமுத்து நடராஜனையும் துப்பாக்கியால் சுட்டும், இரும்பு கம்பியால் அடித்தும் கொலை செய்தது. பின்னர் டபுள் பேரல் துப்பாக்கி, கை துப்பாக்கி, நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் கொள்ளை கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அவரது மனைவி பீனா தேவி, கொழுந்தியாள் சாந்து, அசோக் (எ) லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெகதீஸ், ஜெயில்தார்சிங் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


Bawaria Gang Case: பவாரியா வழக்கில் திடீர் திருப்பம்... ஜெயில்தார்சிங்கிற்கு ஜாமீன்


இவர்களில் கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ், வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்களில் 2 பேர் ஜாமீனில் சென்று தலைமறைவாகிவிட்டனர். தற்போது அசோக் (எ) லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஜெகதீஷ் ஆகிய 4 பேர் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு சேலம் 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இதில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தேசிய சட்ட பணிகள் ஆணையம் மூலம் இலவசமாக வழக்கறிஞர்கள் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் (எ) லட்சுமணன், தாளமுத்து நடராஜன் கொலை நடக்கும்போது, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்ததாகவும். எனவே அச்சிறையின் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அச்சிறைக்கு நீதிமன்றம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜோத்பூரில் இருந்து வழக்குக்கு ஆஜராவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் ஆஜராவதாக, சிறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவ்வாறு சேலம் நீதிமன்றம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில், ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு சூப்பிரெண்டிடம் சென்று, அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம். இவ்வழக்கு வருகின்ற 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



இதற்கிடையில் சிறையில் இருந்த ஜெயில்தார் சிங்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆசிரியரான இவர், கும்பல் தலைவரான ஓம் பிரகாசின் மருமகன். தமிழ்நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு சென்று கொடுக்கும் நகையை விற்பனை செய்து, அனைவருககும் பங்கிட்டு கொடுக்கும் வேலையை இவர்தான் செய்து வந்தார் என காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.