ஜூசென்னையில் நீட் தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள பிரதாப் என்பவர் மனைவி ஜெயந்தி, மகன்கள் கரண்ராஜ், தனுஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் இளைய மகன் தனுஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். தாய் ஜெயந்தி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பிய நிலையில் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டில் உள்ள படுக்கையறையின் மேற்கூரையில் தனுஷ் பெல்ட்டால் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததைப் பார்த்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக பிரதாப் வீட்டுக்கு வந்தனர். மேலும் இதுகுறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தனுஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் தனுஷ் எம்.எம்.டி.ஏ அரசு பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பில் 489 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து டாக்டராக ஆசைப்பட்ட அவர் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் இருந்துள்ளது. தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க போதிய பணம் இல்லாததால் தொடர்ந்து வீட்டில் இருந்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடக்கவிருந்த நிலையில் தனுஷ் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய தற்கொலை தொடர்பாக செல்போனில் வீடியோ ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். அதில் ”என்னால் படிக்கவும், சாதிக்கவும் முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் எதிலும் என்னால் ஜெயிக்க முடியவில்லை.அதேசமயம் முழு கவனத்துடனும் ஈடுபட முடியவில்லை. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு என்ன வரும் என தெரியாமல் பொய்யான அறிவை இத்தனை நாட்களாக வளர்த்து கொண்டிருந்தேன்.
என்னுடைய எதிர்காலத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என தெரியாத ஆளாக மன அழுத்தத்தில் இருக்கிறேன் என தனுஷ் கூறியுள்ளார். நீட் தேர்வு பயத்தால் தொடரும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்