ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு பிறகு கொரோனா பேரிடரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனையை சமாளிக்க ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் அரசின் உத்தரவை தொடர்ந்து தற்போது ஸ்டெர்லைட் ஆலை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலை மொத்த உற்பத்தியான 1000 மெட்ரிக் டன் பிராண வாயு உற்பத்தியையும் செய்ய முழு முயற்சி எடுக்கும். மேலும் இவை அனைத்தையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும். இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் நிபுணர்களிடம் ஆலோசித்து வருகிறது. தயாரிக்கும் ஆக்சிஜன் வாயுவை தமிழ்நாட்டிற்கு தருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் 1050 மெட்ரிக் டன் பிராண வாயுவை உற்பத்தி செய்யும் திறனுள்ளது. தற்போது அதில் 35 மெட்ரிக் டன் பிராண வாயுவை மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த அளவு பிராண வாயுவை திரவ வடிவில் தமிழ் நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று ஸ்டெர்லைட் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தன. மேலும் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்திருந்தார். .ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்தால் தென் தமிழக மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.