ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதியில் அமைந்துள்ள ஷிவ்புரி. இந்த பகுதியில் வசித்து வருபவர் வீணாகுமாரி. அவருக்கு வயது 66. இவர் அந்த மாநில சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ரன்வீர்குமார் பந்தாரி என்ற கணவரும், மணீஷ் என்ற மகனும் உள்ளனர். மணீஷ் ஒரு பி.டெக் பட்டதாரி ஆவார். ரன்வீர்குமார் பந்தாரியும், மணீசும் அதே ஷிவ்புரியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். வீணாகுமாரி வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இவர்கள் இவ்வாறு வசித்து வருகின்றனர்.


இருப்பினும், கணவருக்கும், மகனுக்கும் தினசரி உணவுகளை கொடுப்பதை வீணாகுமாரி வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல தனது மகனுக்கு இரவு சாப்பாடு கொடுப்பதற்காக வீணாகுமாரி சென்றுள்ளார்.




அப்போது, வீணாகுமாரி தனது மகன் மணீஷ் உடன் அருகில் இருந்த பூங்காவில் பேசிக்கொண்டிருந்தனர்.   அப்போது, ரன்வீர்குமார் பந்தாரியும் அங்கே சென்றுள்ளார். அவரைப் பார்த்த வீணாகுமாரி ரன்வீர்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.


அப்போது, திடீரென வீணாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்டு அச்சமுற்ற  ரன்வீர்குமார் பந்தாரி திரும்பிப் பார்த்தபோது வீணாகுமாரி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவரது மகன் மணீஷ் ரத்தக்கறையுடன் ஓடிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக ரன்வீர்குமார் அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார். உடனடியாக விரைந்த அக்கம்பக்கத்தினர் வீணாகுமாரியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரை அவரது மகன் மணீஷ் பல முறை கத்தியால் குத்தியிருந்ததால் அவரது உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்தது. இதனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




காவல்துறையினர் பூங்கா அருகே இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மணீஷ் அவரது தாயார் வீணாகுமாரியை தாக்குவதும், அவரை கீழே பிடித்து தள்ளுவதும் பதிவாகியிருந்தது. மேலும், கத்தியால் அவரை பல முறை குத்துவதும் பதிவாகியிருந்தது. போலீசார் மணீஷ் மீது 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும், போலீசார் இதுதொடர்பாக கூறியபோது கொலைக்கான காரணம் குறித்து முழு விசாரணையும் நடைபெற்ற பிறகே தெரிய வரும் என்றும், விரைவில் மணீஷை கைது செய்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். பெற்ற மகனே தாயை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண